சுற்றுச்சூழல் தினம் இம்முறையும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP), பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள் என்ற சமகால மற்றும் மிக முக்கியமான உலகளாவிய கருப்பொருளின் கீழ் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக உலகெங்கிலும் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்கு அவசர மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது.
அதன்படி, இன்று அனுசரிக்கப்படும் உலக சுற்றுச்சூழல் தினத்தில், அவசர பருவநிலை நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி, பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைத்தல், சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுத்தல் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான உலகளாவிய முயற்சிகளை விரைவுபடுத்துவது வலியுறுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதலால் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றமே தற்காலத்தில் மனிதகுலம் எதிர்கொள்ளும் முதன்மையான சவால் என்பதை ஒட்டுமொத்த உலக மக்களும் கண்டறிந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



