பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த துறவிகளின் பாரதூரமான குற்றங்களுக்கும் ஒழுக்கமின்மைகளுக்குள்ளும் கூட அரசு கட்டுப்பட்டுள்ளது என்பதை குற்றமிழைக்கும் பௌத்த துறவிகளை எவ்வாறு நீதிமன்றங்களில் நிறுத்துவது என்ற ஜனாதிபதியின் ஏக்கம் புலப்படுத்தவதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
யாழ் நகரில் வெள்ளிக்கிழமை (29) உயர் அதிகாரத்தில் உள்ள பௌத்த பிக்கு ஒருவரால் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமையை கண்டித்தும் அரச தலையீடுகள் இன்றி சிறுமிக்கு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என வலியுறுத்தி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும், நாங்கள் உண்மையான பௌத்தர்களையும் சிங்கள மக்களையும் மதிக்கின்றோம். ஆனால் இலங்கையில் பௌத்த உயர் பீடங்கள் பேரினவாதத்திற்குள் சிக்கிக் காணப்படுகின்றன. தேசிய இனப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் இனவாதமிக்க பௌத்த பேரினவாத சக்திகளே. அனுராதபுரத்தில் சிறுவி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு குரலற்றவராக நீதியை கோரி நிற்கின்றார். நிலைமை இவ்வாறிருக்க ஜனாதிபதி எவ்வாறு பௌத்த மதகுருக்களை நீதிமன்றங்களில் நிறுத்துவது என ஜனாதிபதி வேதனைப்படுகின்றார். சட்டத்தின் முன் சகலரும் சமன் என்ற அடிப்படையில் நாட்டை அரசாங்கம் வழிநடத்த முன்வர வேண்டும்.



