5ஆம், 6ஆம் கட்ட மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்!

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளுக்கு நாணய நிதியத்தின் இயக்குநர் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு மேலும் 695 மில்லியன் டொலர் நிதி விடுவிக்கப்படும்.

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மதிப்பீடுகள் தொடர்பில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபை  புதன்கிழமை (27) வொஷிங்டனில் கூடியது. அக்கூட்டத்தைத் தொடர்ந்து நாணய நிதியத்தின் பிரதி இயக்குநரும், பதில் தலைவருமான கெஞ்சி ஒகமுராவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டம் தொடர்பான 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளுக்கு நாணய நிதியத்தின் இயக்குநர் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் பொருளாதாரக்கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் இலங்கைக்கு உடனடியாக 695 மில்லியன் டொலர் நிதி விடுவிக்கப்படும்.

இக்காலப்பகுதியில் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கையினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மிகவும் வலுவானவையாக அமைந்திருந்தன. எரிபொருள் விலை மற்றும் மின்சாரக்கட்டண நிர்ணய முறைமையை செலவினங்களை ஈடுசெய்யக்கூடியவகையில் மாற்றியமைப்பதற்கு அவசியமான முன்கூட்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

புதிய வெளிநாட்டுக் கொடுப்பனவு நிலுவைகளை உருவாக்காதிருத்தல் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்காதிருத்தல் போன்ற தொடர் செயற்திறன் அளவுகோல்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பெரும்பாலான கட்டமைப்புசார் நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்பட்ட போதிலும், அவற்றை நிறைவேற்றுவதில் காலதாமதம் நிலவியது.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்த போர் மற்றும் ‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட தாக்கங்கள் என்பன பொருளாதார சரிவு அச்சுறுத்தலைத் தோற்றுவித்திருந்தாலும், மீண்டும் பொருளாதாரம் மீண்டெழும் தன்மையுடன் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகக்கடினமான மறுசீரமைப்புக்கள் மூலம் எட்டப்பட்ட வெற்றிகள், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களைப் பாதுகாப்பதற்கும், கொள்கை ரீதியான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுப்பதற்கும் பங்களிப்புச்செய்துள்ளன.

அதேபோன்று இச்செயற்திட்டத்தின் ஊடாக விடுவிக்கப்படும் நிதியின் மூலம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களைப் பாதுகாக்கும் அதேவேளை கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தல், விலை மற்றும் நிதி உறுதிப்பாட்டைப் பேணல், வெளிநாட்டுக்கையிருப்பை மீளக்கட்டியெழுப்பல், நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன் ஊழல் மோசடிகளால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மையமாகக்கொண்ட கட்டமைப்புசார் சீர்திருத்தங்களை மேற்கொள்ளல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான மறுசீரமைப்புக்களை முன்னெடுப்பதற்கு ஆதரவளிக்கப்படும்.

இருப்பினும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மூண்ட போர் இலங்கையின் பொருளாதாரத்தில் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாக வீழ்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வினால் பணவீக்கம் அதிகரிப்பதுடன், அது நடைமுறைக்கணக்கைப் பலவீனப்படுத்தும். சுற்றுலாத்துறை வருமான வீழ்ச்சி இதனை மேலும் தீவிரப்படுத்தும். மத்திய கிழக்குப் போரின் தீவிரம் மற்றும் கால அளவு குறித்த நிச்சயமற்ற தன்மைகள் பொருளாதாரத்தின் மீதான தாக்கங்களை மேலும் உயர்த்துகிறது.

எனவே இந்த வெளியக அதிர்ச்சிகளைக் கையாள்வதற்கு இவ்வாண்டில் நிதிக்கொள்கையைத் தளர்த்துவது பொருத்தமானதாக இருக்கும். அதேவேளை இப்பாதிப்புக்களைக் கையாள்வதற்கு அரசாங்கம் தற்காலிக நிவாரண வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருப்பதுடன், தித்வா சூறாவளியின் பின்னரான மீட்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக மேலதிக நிதியையும் ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதுமாத்திரமன்றி 2027 ஆம் ஆண்டு முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதம் எனும் ஆரம்ப நிலுவை இலக்கை எட்டுவதற்கும் அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

அதேபோன்று வரி அறவீட்டு முறைமையை செயற்திறன்மிக்க வகையிலும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் மாற்றியமைப்பதற்கு நிலையான வருமானத்திரட்சி அவசியமாகும். அத்தோடு கடன்மறுசீரமைப்பு செயன்முறை பூர்த்தியடையும் நிலையில் உள்ளது. மேலும் நாணயக்கொள்கையைப் பொறுத்தமட்டில் விலை உறுதிப்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.