குயின்ஸ்லாந்து நூலகம் ஆரம்பித்துள்ள ‘மனித புத்தகங்கள்’!

ஆஸ்திரேலியாவில் முதல்தடவையாக மனித புத்தகங்களை (human books) வாடகைக்கு வழங்கும் புதிய சேவையொன்றை குயின்ஸ்லாந்து நூலகம் ஆரம்பித்துள்ளது.

புத்தகங்களை வாடகைக்கு பெற்று வாசித்துவிட்டு மீள ஒப்படைக்கும் வழக்கமான நடைமுறையைப்போல, நூலகத்திலிருந்து மனிதர்களை வாடகைக்கு பெற்று அவர்களின் கதைகளை கேட்டறிவதற்கு ஏதுவாக இந்தப்புதிய முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான கதைகளை பகிர்ந்துகொள்ளக்கூடிய கதை மாந்தர்களை மாதம் ஒரு தடவை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இப்போதைக்கு இந்த புதிய நடைமுறையை வடிவமைத்துள்ளதாக குயின்ஸ்லாந்து அரசு நூலகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய முறைகுறித்து பயனாளர்களின் மத்தியில் காணப்படுகின்ற விருப்பத்தை பொறுத்து, தொடர்ச்சியாகவும் அதிக எண்ணிக்கையிலும் கதை மாந்தர்களை வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நூலகம் தெரிவித்துள்ளது.

மனித புத்தகங்களை நூலகங்களில் வாடகைக்கு வழங்கும் முறை இருபது வருடங்களுக்கு முன்னரே டென்மார்க்கில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.