அனுராதபுரத்தில் பௌத்த துறவியால் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி நல்லூர் ஆலய பின்புறத்தில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால் போராட்டம் நடத்தப்பட்டது.
அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான பௌத்த துறவி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சிறுமிக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினர், ஜனாதிபதி, நீதி அமைச்சர், சட்ட மாஅதிபர், மகளிர் விவகார அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எழுத்து மூலமாக மகஜரை கையளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில், மதத்தின் பெயரால் குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பிக்கக்கூடாது என வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் கோரிக்கை முன்வைத்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவருக்கு எவ்வாறான தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என சட்டம் இறுக்கமான நடைமுறைகளை கொண்டுள்ளது. ஆனால் அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய பௌத்த துறவி பிணையில் விடுவிக்கப்பட்டமை இலங்கை அரசியலமைப்புக்கு விடுக்கப்பட்ட சவாலாக பார்க்கிறோம் என்றார்.


