மாகாண சபைத்தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெறாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, தன்னிச்சையாக அறிவித்திருப்பது மக்களின் இறையாண்மையை அப்பட்டமாக உதைத்துத் தள்ளும் ஒரு சர்வாதிகாரச் செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபை முறைமையை ஆரம்பம் முதல் எதிர்த்துவந்த மக்கள் விடுதலை முன்னணி, இவ்வாறான இழுத்தடிப்புகள் மூலம் அதனை இல்லாது செய்ய முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
ஆளும் தேசிய மக்கள் சக்தியின் தலைமைக்கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு இந்த நாட்டின் தேர்தல் குறித்து தீர்மானிப்பதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று கேட்க விரும்புகின்றேன். மாகாணசபைத் தேர்தலை நடத்த விரும்பாத இந்த அரசாங்கம் டில்வின் சில்வா மூலம் அதனை வெளிப்படுத்தியுள்ளது.
சிறுபான்மை மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியும், இந்த அரசாங்கமும் அந்த மக்களின் மாகாண சபை அபிலாசைகளை குழி தோண்டிப் புதைக்கும் நடவடிக்கை எடுப்பது கவலையைத் தருகின்றது.
இலங்கை அரசியலமைப்பின் படி, தேர்தலை நடத்துவது மற்றும் அது தொடர்பான இறுதித்தீர்மானங்களை எடுக்கும் முழுமையான அதிகாரம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிற்கே உரியதாகும். அதேபோல், பொது நிதியை ஒதுக்குவதும், அதனை மாற்றுவதும் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் நிதி அமைச்சருக்குரியது.
மிக முக்கியமாக, மாகாண சபை முறைமை இந்த நாட்டு சிறுபான்மை மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கான ஒரு அரசியல் தீர்வாக, அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் ஊடாகக் கொண்டு வரப்பட்ட ஒன்றாகும். அதிகாரப் பகிர்வு மற்றும் சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாஷைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய இந்த மாகாண சபை கட்டமைப்பை, தேர்தல் நடத்தாமல் தொடர்ந்தும் முடக்கி வைக்க முற்படுவது சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
சிறுபான்மையினரின் அரசியல் அபிலாசையான மாகாண சபைத்தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைப்பதும், அதனை ஒரு கட்சிச்செயலாளர் ஊடகங்களுக்கு அறிவிப்பதும் ‘மாற்றத்தை’ நோக்கி வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயலாகும்.
சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்போம் என்று வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இப்போது தம்மை ஏமாற்றுகிறது என்பதை மக்கள் புரிய ஆரம்பித்துள்ளார்கள் என்றார்.



