இந்திய – இலங்கை அரசாங்கங்கள் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாழ். மாநகர சபையிடம் கையளிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மைய விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“அண்மையில் நடைபெற்ற எமது கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது” என்று அவர் தெரிவித்தார்.
அத்துடன், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவைச் சந்தித்தும் இது தொடர்பில் தங்களின் கரிசனைகளை வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பூர்த்தி செய்யப்பட்ட முழுமையான யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையக் கட்டடம் நேரடியாக யாழ். மாநகர சபைக்குக் கையளிக்கப்பட வேண்டும்.
ஆனால் அதன் தளங்கள் மற்றும் பகுதிகள் தொடர்பாகவும், எவ்வாறு அதனைப் பயன்படுத்துவது என்பது தொடர்பாகவும் ஆலோசனைக் குழுவை உள்ளூர் மட்டத்தில் நியமிக்கலாம் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபை முழுமையாகச் செய்வதில் சில சிக்கல்கள் இருப்பதை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த அவர், இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தீர்மானித்தபடி யாழ். மாநகர சபையிடம் குறித்த கட்டடத்தைக் கையளிக்க வேண்டும்.
அந்தக் கட்டடம் தொடர்பாகக் கூட்டு முகாமைத்துவ முயற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதுடன் அரசாங்கம் எடுத்த முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்
அடுத்த வாரத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரைச் சந்தித்து இது தொடர்பில் தெளிவுபடுத்தி மீண்டும் கலந்துரையாட இருப்பதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.



