வடமாகாணத்தில் ஆசிரியர்களுக்கு “சேவையின் தேவை” என்ற பெயரில் சட்டவிரோதமாகவும், பாரபட்சமாகவும், பழிவாங்கும் நோக்கத்துடனும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு வடமாகாண ஆளுநரால் 25க்கும் மேற்பட்ட இடமாற்றங்கள் இடமாற்றச் சபையின் தீர்மானத்தை மீறி தன்னிச்சையாக நிறுத்தப்பட்டிருந்ததாகவும், 2026 ஆம் ஆண்டில் தீவகம் மற்றும் வடமராட்சி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இடமாற்றச் சபை கூட்டப்படாமலேயே இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்ட பல ஆசிரியர்கள் இன்னும் தங்கள் பணியிடங்களிலிருந்து விடுவிக்கப்படவில்லை என்றும், இதனால் ஆசிரியர்களின் அடிப்படை உரிமைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுமார் 193 ஆசிரியர்கள் சட்டவிரோதமான, ஜனநாயக விரோதமான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினார்.
வடமாகாண இடமாற்றக் கொள்கையின் 44 ஆம் பிரிவும், தாபன நடைமுறை விதிக்கோவையின் 188 மற்றும் 185 ஆகிய பிரிவுகளும், அரச சேவையில் இடமாற்றச் சபை மூலமாகவே செயல்பட வேண்டும் என்பதைத் தெளிவாக வரையறுத்துள்ள நிலையில், அவை மீறப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
“சேவையின் தேவை” என்ற பெயரில் செய்யப்பட்ட இடமாற்றம் உண்மையில் நிர்வாக துஸ்பிரயோகமும் பழிவாங்கலுமாகும் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் எந்த கலந்துரையாடலும் இன்றி இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், மருத்துவ காரணங்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்த ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிலர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததற்காகவே பழிவாங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இடைக்கால தடை உத்தரவு பரிந்துரையை வழங்கியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடமாகாண கல்வி அதிகாரிகள், வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் வடமாகாண ஆளுநரின் நடவடிக்கைகள் ஆசிரியர்களுக்கும் அவர்களை சார்ந்து வாழும் குடும்பங்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த அடிப்படை உரிமை மீறல்களில் அவசரமாக தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.



