உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் தீவிரமாக அரசியலாக்கி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இந்த ஒட்டுமொத்தச் சம்பவத்தின் “கடைசி நூல்” மக்கள் விடுதலை முன்னணி வசமே உள்ளது என்பது தற்போது தெளிவாகியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் சிறைச்சாலையில் இருந்தபோது, அவரை இரகசியமாகச் சந்தித்தீர்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு நாமல் ராஜபக்ச இவ்வாறு பதிலளித்தார்:
“பிள்ளையானைப் பார்ப்பதற்கு நான் சிறைச்சாலையின் சுவரைத் தாண்டிக் குதிக்கவில்லை. சட்டப்பூர்வமாக, ஆவணங்களில் கையெழுத்திட்டுத்தான் பார்க்கச் சென்றேன். அந்த நேரத்தில் சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் அருகில் இருந்தார்.
அது ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டது. நிலைமை இப்படி இருக்கையில், பொதுமக்களின் பணத்தைச் செலவழித்து பிரான்சுக்குச் சென்று, நாமல் பிள்ளையானைப் பார்க்கச் சென்றாரா என்று வாக்குமூலம் எழுதுவது பொதுப் பணத்தை துஷ்பிரயோகம் செய்யும் செயலாகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் பிள்ளையான் அரசியல் கைதியாக வைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர பிள்ளையான் செய்த அர்ப்பணிப்புக்காக முன்நின்று பேசுவதற்குத் தாம் இருமுறை யோசிக்கப் போவதில்லை என்றும் கூறினார்.
அத்துடன் தற்போதைய அரசாங்கத்தின் விசாரணை முறைகள் குறித்து நாமல் ராஜபக்ச கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் கோப்புகளை மூடிமறைத்த அதிகாரிக்கு பதவியுயர்வு வழங்கி, அதே அதிகாரியை அனுப்பி வாக்குமூலம் எழுதி வாங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சாடினார்.
இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியவர்களின் பெற்றோர்கள் மக்கள் விடுதலை முன்னணியின் தீவிர உறுப்பினர்கள் என்றும், தாக்குதல் நடத்தியவரின் தந்தை JVP இன் தேசியப் பட்டியலில் இருந்த ஒரு நபர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தங்களிடம் இருப்பதாகக் கூறிய சாட்சிகளை அவர்கள் ஏன் இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை?” என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பினார்.



