சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி கிடைத்தவுடன் கையிருப்பு சீராகும் : அரசாங்கம் தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து எதிர்வரும் மே 27ஆம் திகதிக்குள் குறிப்பிடத்தக்க அளவிலான வெளிநாட்டு நிதி உதவி இலங்கைக்குக் கிடைக்கும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“எதிர்வரும் 27ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை எமக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது”என்று அவர் குறிப்பிட்டார்.

ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களுக்கு மேலதிகமாக, பல்தேசிய முகவர் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் வெளிநாட்டு நிதி, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்தும் என்று அவர் விளக்கமளித்தார்.

அதன்படி இந்த ஆண்டிற்குள் 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் உலக வங்கி 150 மில்லியன் அமெரிக்க டொலர்களும், பிற இணைந்த நிறுவனங்கள் மூலம் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிதி வரவுகள் அந்நியச் செலாவணி முகாமைத்துவம் தொடர்பான அச்சத்தைப் போக்கும் என்று குறிப்பிட்ட பிரதி அமைச்சர், இதனை முகாமைத்துவம் செய்வதில் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாது என்றும் உறுதியளித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கும் வெளிநாட்டு நிதியுதவியை வலுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே, மே 27ஆம் திகதி கிடைக்கவிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி அமைகின்றது என்று நிதி இராஜாங்க அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.