கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்டுள்ள எபோலா வைரஸ் பரவலை உலக சுகாதார ஸ்தாபனம் சர்வதேச பொதுச் சுகாதார அவசர நிலையாகப் பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து, அதற்கு இணங்க இலங்கையில் ஐந்து அம்சத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
கொங்கோ மற்றும் உகண்டா ஆகிய நாடுகளில் தற்போது எபோலா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த ஐந்து அம்சத் திட்டத்தின் கீழ், நாட்டின் பிரதான விமான நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் எவரேனும் கண்டறியப்பட்டால் அவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அங்கொடை தேசிய தொற்றுநோய் தடுப்பு நிறுவனம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நோயைக் கண்டறிவதற்கான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வக வசதிகள் மேம்படுத்தப்பட்டு, ஒட்டுமொத்த தேசிய நோய் கண்காணிப்பு முறைமையும் வலுவூட்டப்பட்டுள்ளதுடன், சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு உலக சுகாதார ஸ்தாபனத்துடன் நெருங்கிய தொடர்பைப் பேணி உலகளாவிய நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.
இருப்பினும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அளவுகோல்களின்படி இலங்கை எபோலா பரவல் குறித்து மிகக் குறைந்த ஆபத்துள்ள நாடாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இது குறித்து வீண் அச்சமடையத் தேவையில்லை என்றும், அத்தியாவசியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.



