பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தமிழர் ஒற்றுமையைச் சிதைக்கும் வகையில் செயற்படுவதை நிறுத்திவிட்டு, உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், “நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் தங்களுக்கான விடுதலைக்காக, 75 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப்பெரிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள். பல தலைமுறைகள் தங்களின் குழந்தைப் பருவம், குடும்பம், கல்வி மற்றும் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர்கள் மீது திட்டமிட்ட மொழி ஒடுக்குமுறை, கல்வி மறுப்பு, நில அபகரிப்பு மற்றும் இராணுவ அடக்குமுறைகள் தொடர்ந்து திணிக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள். பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
உலகம் முழுவதிலும் தடை செய்யப்பட்டிருந்த இரசாயன குண்டுகள் போன்ற மனிதாபிமானமற்ற ஆயுதங்கள் தமிழர்கள் மீது வீசப்பட்டு நமது உறவுகள் கொத்துக்கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டார்கள்.
குறிப்பாக, 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் பாதுகாப்பு வலயங்களுக்குள் இலட்சக்கணக்கான மக்களை ஒன்றாகக் குவித்து, ஒரு இலட்சத்து எழுபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமான உறவுகள் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.
உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, ஒரு இனத்தின் உயிர் பறிக்கப்பட்டது.
இன்றளவும் உடலில் பாய்ந்த குண்டுகளோடும் அந்த வலிகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற போராளிகளும் பொதுமக்களும் ஏராளம் உள்ளனர்.
தாய்மார்கள் இன்னும் தங்கள் பிள்ளைகளின் படங்களைக் கையில் ஏந்தி நீதிக்காகக் கண்ணீரோடு காத்திருக்கிறார்கள்.
தாய் நிலத்திலிருந்து வெளியேறிய உறவுகள் உலகின் பல்வேறு நாடுகளில் சிதறி வாழ்ந்து வருவதுடன், தமிழ்நாட்டின் பல்வேறு முகாம்களில் இன்னமும் முழுமையான மனித உரிமைகளும் நிரந்தரமான வாழ்வாதாரமும் இல்லாமல் சிறை வாழ்க்கையைப் போன்ற சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தனைக் கொடுமைகளும் யுத்தங்களாலும், காட்டிக்கொடுப்புகளாலும், இன ஒற்றுமையைப் பிளவுபடுத்திய துரோகங்களாலும் நடந்தேறியவை என்பதை வரலாறு மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
எனவே, “இராமநாதன் அர்ச்சுனா தமிழர் ஒற்றுமையைச் சிதைக்காமல் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டணியின் தலைவரான தி. வேல்முருகன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.



