நேற்றைய தினம் (18) நினைவு கூரப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சர்வதேச நாடுகளின் அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் (Uma Kumaran MP) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் படுகொலை நடந்து 17 ஆண்டுகள் கடந்தும் இதுவரை தமிழ் மக்களுக்கு எவ்வித நீதியும் கிடைக்கவில்லை என்று அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இராணுவப் போரின் இறுதி நிலைகளில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொடூரமாகக் கொன்றழிக்கப்பட்டதை நினைவுகூர்ந்துள்ள அவர், பாதிக்கப்பட்ட குடும்பங்களினதும் உயிர் தப்பியவர்களினதும் வலியும் துயரமும் உலகளாவிய புலம்பெயர் தமிழ் மக்களின் நினைவுகளில் இன்றும் ஆறாத வடுவாகப் பதிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்
தற்போது செம்மணி – சித்துப்பாத்தி பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு வரும் மனிதப் புதைகுழியில் இருந்து குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகள் உள்ளிட்டவர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனிதநேயத்திற்கு எதிரான கொடூரமான குற்றங்களை உலகிற்கு மீண்டும் ஒருமுறை அப்பட்டமாக நினைவூட்டுகின்றது என்றும் உமா குமாரன் தெரிவித்துள்ளார்.
உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட்டால் மட்டுமே நிலையான அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்று வலியுறுத்தியுள்ள அவர், இலங்கையில் இன்றும் மௌனமும் குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளும் நிலையும் நீடிப்பதாக சாடியுள்ளார்.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கனடாவிலுள்ள அரசியல் தலைமைகள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வழங்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனடிப்படையில், கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், “பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு முள்ளிவாய்க்காலில் நடந்த கொடூரமான படுகொலையுடன் சிறிலங்கா உள்நாட்டுப் போர் துயரத்துடனும் இரத்தக் கறையுடனும் முடிவுக்கு வந்தது
தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில் இந்தப் பெருங்குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் துக்கப்படுகிறோம். உயிர் பிழைத்தவர்களைக் கௌரவிப்பதுடன் நீதிக்கான எங்கள் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ச அரசாங்கம் தங்களின் குற்றங்களுக்காக நீதியை எதிர்கொள்ள வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
அத்துடன் இனப்படுகொலை செய்தவர்களுக்கு கனடா ஒரு புகலிடமாக இருக்க முடியாது என்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்
“தமிழ் இனப்படுகொலைக்கு பலியானவர்களை நாங்கள் நினைவுகூருகிறோம். அவர்களின் நினைவைப் போற்றுகிறோம்.
கனடா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகங்களுடன் இணைந்து நினைவு கூர்தல், சிந்தித்தல் மற்றும் நீதி, அமைதி, மனித உரிமைகளுக்கான தொடர்ச்சியான தேடலில் நாங்கள் துணை நிற்கிறோம்” என்று கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) தெரிவித்துள்ளார்.
அத்துடன், கனடாவின் எரிசக்தி அமைச்சர் டிம் ஹாட்ஜ்சன் (Tim Hodgson), பாராளுமன்ற உறுப்பினர்களான ராப் ஒலிஃபண்ட் (Rob Oliphant), மைக்கேல் கோட்டோ (Michael Coteau), ஹெடி ஃப்ரை (Hedy Fry), மேகி சி (Maggie Chi), அஸ்லம் ரானா (Aslam Rana) மற்றும் பிராம்ப்டன் நகர மேயர் பேட்ரிக் பிரவுன் (Patrick Brown), மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களான விஜய் தணிகாசலம் (Vijay Thanigasalam), மேரிட் ஸ்டைல்ஸ் (Marit Stiles), சில்வியா குவால்தியேரி (Silvia Gualtieri) அரசியல் தலைவர்களும் தமிழ் இனப்படுகொலை நினைவு நாளை ஒட்டி தங்களது நினைவுச் செய்திகளைப் பகிர்ந்துள்ளனர்.



