மாவீரர்கள் யார்?: விதுரன்

இலங்கை வரலாற்றில் மே மாதம் என்பது வெறும் நாட்காட்டியில் இலகுவாக கடந்து செல்லும் மாத மொன்று மாத்திரமல்ல. அதுவொரு இனத்தின் குருதி படிந்த வடுக்களை மீள நினைவூட்டும் கறைகள் நிறைந்த மாதமாகும்.
இம்முறை ‘15 ஆவது தேசிய மாவீரர் நினைவு தினம்’ என்ற பெயரில் பத்தரமுல்லையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்வுகள், ஒரு புதிய அரசியல் தந்திரோபாயத்தின் வடிவமாகும்.
குறிப்பாக, வடக்கு-கிழக்கில் போரில் உயிர்நீத்த தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்பினரின் குடும்பங்களை உள் வாங்கி, ‘அனைவரும் இலங்கையர்’ என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் இந்த நகர்வு, நீண்டகால உரிமைப் போராட்டத்தின் தியாகங்களை மலினப்படுத்தும் முயற்சியே தவிர வேறில்லை.
‘மாவீரர்கள்’ என்ற சொல்லாடல் ஈழத் தமிழர்களின் ஆன்மாவோடு கலந்தது. அதுவொரு அரசால் வழங்கப்படும் கௌரவப் பட்டம் அல்ல. மாறாக, ஒரு தேசிய இனத்தின் விடிவிற்காகத் தன்னுயிரைத் ஈகம் செய்த மறவர்களுக்காக மக்கள் தம் இதயங்களில் சூட்டிய மகுடமாகும்.
இந்த வரலாற்றுப் பின்னணியையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈடு இணையற்ற தியாகங்களையும், மக்கள் வரிப்பணத்தில் மாதாந்த சம்பளம், இதர சலுகைகள் என்று அனைத்தையும் ஒருங்கே பெற்று சீருடை அணிந்து அரச படைகளின் வீரர்களோடு ஒப்பிடுவது என்பது தார்மீக ரீதியாகவும் அற ரீதியாகவும் பாரிய முரண்பாடாகும்.
ஒரு நாட்டின் இராணுவத்தில் இணைந்து பணி யாற்றுவது என்பது அடிப்படையில் ஒரு தொழில்சார்ந்த தெரிவாகும். அங்குச் சம்பளம் உண்டு, ஓய்வூதியம் உண்டு, பதவி உயர்வுகள் உண்டு. இதர சலுகைகளும் உண்டு. ஒரு வீரர் போர்க்களத்தில் மரணிக்கும்போது, அவர் தனது நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஒரு கடமையை நிறைவேற்றும் போதே மரணிக்கிறார். இதுவொரு நிர்வாகக் கடமையின் பகுதியாகும்.
ஆனால், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள் அத்தகையவர் கள் அல்லர். அவர்கள் எந்தவொரு பொரு ளாதார இலாபத் தையோ, பதவிகளையோ எதிர்பார்த்துப் போர்க்களத்திற்குச் செல்லவில்லை.
மாறாக, தனது இனம் அடிமைப்பட்டுக் கிடப்பதை யும், தனது நிலம் ஆக்கிரமிக்கப்படுவதையும் கண்டு, அந்த அடிமை விலங்கை உடைக்க வேண்டும் என்ற உணர்வெழுச்சியால் தூண்டப்பட்டவர்கள். ‘தன் உயிர் போயினும் தன் இனம் வாழ வேண்டும்’ என்ற அதியுயர் தியாக உணர்வுதான் அவர்களை வீறுகொண்டு வழி நடத்தியது.
உலக வரலாற்றில் அயர்லாந்து குடியரசு இராணு வம், வியட்நாமின் விடுதலைப் போராளிகள் அல்லது தென்னாப்பிரிக்காவின் இனவெறிக்கு எதிரான போராளிகள் என்று எவரை எடுத்துக்கொண்டாலும், அவர்கள் எவரும் அரச சம்பளத்திற்காகப் போராடியவர்கள் அல்லர்.
உரிமைக்காகப் போராடுபவன் தனது சொந்த வாழ்வை இழக்கத் துணிகிறான்; ஆனால், அரச படையில் இருப்பவர் தனது வாழ்வாதாரத்திற்காகப் போரைத் தொழிலாகக் கொள்கிறார். இந்த இரண்டுக்கும் இடையிலான மெல்லிய கோடுதான் ‘மாவீரன்’ என்பதற்கும் ‘அரச படை வீரன்’ என்பதற்குமான பாரிய வித்தியாசம்.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி அநுர அரசாங்கத்தின் தற்போதைய ‘தேசிய மாவீரர்கள் தினம்’ என்ற பொதுவான ‘ஒன்றிணைந்த அஞ்சலி’ திட்டமானது, சிங்கள தேசியவாத அரசியலுக்குள் தமி ழர்களின் தனித்துவமான போராட்ட அடையாளத்தைக் கரைக்கும் முயற்சியாகும்.
ஒரு விடுதலைப் போராளி சயனைட் குப்பியைத் தனது கழுத்தில் சுமப்பதன் நோக்கம், எதிரியிடம் பிடிபட்டுத் தனது இயக்கத்தின் இரகசியங்களையோ அல்லது இலட்சியத்தையோ காட்டிக்கொடுக்கக் கூடாது என்பதாகும். இது உலக இராணுவ வரலாற்றிலேயே எங்கும் காண முடியாதவொரு அதியுயர் தியாகத்தின் உச்ச நிலை.
தன் தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காகப் போராடு வதாகச் சொல்லும் அரச படைக்குப் பின்னால் முழுமையான அரசு, ஆயுதங்கள், உலக நாடுகளின் அங்கீகாரம் மற்றும் சர்வதேசப் பாதுகாப்பு உள்ளன. ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமானது எவ்வித சர்வதேச அங்கீகாரமும் இன்றி, பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும், வெறும் இனப்பற்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது. இங்குதான் ‘உரிமைப் போராட்ட வேட்கை’ என்பது மேலோங்கி நிற்கிறது.
அவ்வாறிருக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ‘அனைவரும் இலங்கையர்’ என்ற கோசத்தை முன்வைத்து, போரில் கொல்லப்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் இராணுவச் சிப்பாய்களின் குடும்பங்களை அஞ்சலி நிகழ்வில் பங்கேற்கச் செய்வதன் மூலம் மாயையை உரு வாக்க முனைகிறார். இது ‘நல்லிணக்கம்’ என்ற பெயரில் செய்யப்படும் அடையாள அழிப்பாகும்.
முப்பதாண்டு கால யுத்தம் என்பது நிலத்திற்காகவோ அல்லது அதிகாரத்திற்காகவோ மட்டும் நடந்ததல்ல. அது தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போர். அந்தப் போரில் தியாகம் செய்த மாவீரர்களை, அரசப் படையில் இருந்த சில தமிழ் முகங்களோடு ஒப்பிட்டுச் சமப்படுத்துவது, தமிழ்த் தேசிய உணர்வைச் சிதைக்கும் செயலாகும்.
வடக்கு-கிழக்கு மக்கள் எதற்காகப் போராடி னார்களோ, எதற்காகத் தங்கள் பிள்ளைகளை அர்ப்ப ணித்தார்களோ, அந்த அடிப்படைக் காரணங்களைக் கண்டுகொள்ளாமல், வெறுமனே பூக்களைத் தூவுவதன் மூலம் அமைதியை நிலைநாட்டிவிட முடியாது. நல்லிணக் கத்தை ஏற்படுத்தியதாக முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது.
உலக முன்னுதாரணங்களைப் பார்த்தால், பிரான்ஸ் புரட்சியில் மக்களுக்காக நின்றவர்கள் அல்லது அமெரிக்கச் சுதந்திரப் போரில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர்கள் – போன்றவர்கள் தான் வரலாற்றில் உண் மையான நாயகர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் அரச சம்பளத்திற்காகப் போரிட்டவர்கள் அல்ல, அவர்கள் ஒரு இலட்சியத்திற்காக நின்றவர்கள் என்பது தான் வரலாற்றுச் சான்று.
அப்படியிருக்க, தமிழீழ கனவுக்காக போராடிய போராளிகள் தமது தாயக மண்ணின் ஒவ்வொரு அங்குலத்தையும் காப்பதற்காக அவர்கள் சிந்திய இரத்தம், பொருளாதாரத் தேவையினால் உருவானதல்ல. ஆனால், அரச படைகளைப் பொறுத்தவரை வடக்கு-கிழக்கு என்பது ஒரு ‘கட்டுப்பாட்டுப் பிரதேசம்’ மட்டுமே.
ஒரு போராளிக்கு நிலம் என்பது தாய்; ஒரு சிப் பாய்க்கு நிலம் என்பது ஆக்கிரமிக்கப்பட வேண்டிய அல்லது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு புவியியல் எல்லை. இந்த மனோநிலையே ‘மாவீரன்’ என்ற தகுதியைத் தீர்மானிக்கிறது. அப்படிப் பார்த்தால் அரச படைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாவீரர்கள் என்ற சொற்பதத்தை பயன்படுத்துவதற்கே தகுதியற்றவர்கள்.
இவ்வாறான நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதி செவ் வாய்க்கிழமை பத்தரமுல்லையில் அஞ்சலி செலுத்து வதன் மூலம், தமிழ் மக்களின் தியாக வரலாற்றைச் சிங்கள மேலாதிக்க வரலாற்றுடன் இணைக்க முற்படுகிறது அநுர அரசாங்கம்.
இது ஒருவகையான ‘மென்மையான ஆக்கிரமிப்பு’ தான். தமிழ் மாவீரர்களின் பெற்றோர்களை அல்லது உறவினர்களை அரச படைவீரர்களின் நிகழ்வுகளில் பங்கேற்கச் செய்வதன் மூலம், ‘உரிமைப் போராட்டம் என்பது பயங்கரவாதம், ஆனால் அரசுடன் இணைந்து நின்றவர்களே உண்மையான தியாகிகள்’ என்ற பிம்பத்தைக் கட்டியெழுப்ப முற்படுகிறார்கள்.
உண்மையான மாவீரர்கள் யாரிடம் உரிமைக்காகப் போராடினார்களோ அதேதரப்பின் கௌரவத்திற்காகக் காத்திருக்க வேண்டிய தேவையோ அவசியமோ இல்லை. மாவீரர்கள் மக்கள் இதயங்களில் வாழ்கிறார்கள். அவர்கள் துயிலும் இல்லங்களில் கனவுகளுடன் இருக்கிறார்கள். தேசத்தின் விடுதலைக் கனவுடன் விழிமூடியவர்கள் துயிலும் இல்லங்களை இடித்துத் தரைமட்டமாக்கிய ஒரு தரப்பு, இன்று பத்தரமுல்லையில் ‘தியாகம்’ பற்றிப் பேசுவதற்கு ஒன்றுபடுமாறு விடுக்கும் அழைப்பு வேடிக்கையானது.
போராட்டம் என்பது வேறு, பணி என்பது வேறு. தன் இனத்தின் உரிமைக்காகச் சாவை முத்தமிடுபவன் மாவீரன் என்பதை ஜனாதிபதி அநுரகுமாரவும் அவரது அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும். அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய ஜே.வி.பிக்கு கூட இந்தப் புரிதல் இல்லாது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை மழுங்கடித்து, அனைவரும் இலங்;கையர் என்று அடையாளம் காண்பிக்க முனைவதானது தமிழர்களை ஒற்றையாட்சி சட்டத்திற்குள் ‘அடக்கப்பட்ட பிரஜைகளாக’ மாற்றுவதற்கான சிங்கள தேசிய வாதத்தின் அதியுச்ச வெளிப்பாடாகும்.
எது எவ்வாறாக இருந்தாலும், உண்மையான மாவீரர்கள் வரலாற்றின் பக்கங்களில் நிரந்தரமாக எழுதப் பட்டுவிட்டார்கள். அவர்கள் துப்பாக்கிகளால் சுடப்பட்டு வீழ்ந்திருக்கலாம், ஆனால் அவர்கள் விதைத்த ‘உரிமை வேட்கை’ என்ற விதை அநுரவின் ‘இலங்கையர்’ என்ற மாயைக்குள் ஒருபோதும் கரையப்போவதில்லை.
தியாகங்கள் மலினப்படுத்தப்படும்போது, வரலாறு மீண்டும் தன்னைத் திருத்திக் கொள்ளும். எனவே, அரச கௌரவங்களை விடவும், தமிழினத்தின் விடுதலைக்காகத் துடித்த இதயங்களின் துடிப்பே என்றும் உண்மையான மாவீரத்துவத்தின் சாட்சியாக இருக்கும்.  அஞ்சலி செலுத்துவது என்பது வெறும் சடங்கல்ல.அதுவொரு கொள்கையின் தொடர்ச்சி. அந்தக் கொள்கை ‘சமத்துவம்’ என்ற பெயரில் ‘நவீன அடிமைத்தனத்துக்குள்’ ஒருபோதும் தொலைந்து போகப்போவதில்லை.