தமிழ் இன அழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டி குற்றவாளிகளை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவற்கு வலியுறுத்துவதோடு தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் பாரதீனப்படுத்தவியலாத சுயநிர்ணய அடிப்படையிலும், தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு வடக்கு கிழக்கினால் தமிழின அழிப்பிற்கு எதிரான தேசிய எழுச்சி நாளான இன்று (மே 18) முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வெளியிடப்பட்ட பிரகடனத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டது.
இந்தப் பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு,

தமிழ் இன அழிப்பு முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றது. தமிழ் இன அழிப்பு செயல்முறை ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாற்று பரிமாணத்தை கொண்டது. பேரரசு கட்டமைப்பின் புவிசார் நலன்களுக்காகவும் சிங்கள பௌத்த பேரினவாத ஏகாதிபத்தியத்தை தக்க வைப்பதற்காகவும் கூட்டு தமிழ் இன அரசியல் வேணாவாவை அதன் ஆயுத பரிமாணத்தை இனப்படுகொலைக்கூடாக முடிவுக்கு கொண்டு வந்ததன் மாயையை முள்ளிவாய்க்காலில் நிகழும் தமிழினப்படுகொலை நினைவு கூறல் தகர்த்து எறிகின்றது.


ஒட்டுமொத்தத்தில் தமிழ் தேசிய நம்பிக்கை மீதான போரை சிங்கள அரசும் துருவப் பேரரசு கட்டமைப்பும் கட்டவிழ்த்துள்ளது. தமிழ் தேசிய நம்பிக்கை தான் ஈழத் தமிழினத்தின் ஆத்மா தமிழ் தேசிய கூட்டு உளவியலின் ஆத்மா தான் எங்களுடைய கூட்டுத்திறாணி. இதை வலுப்படுத்த வேண்டிய வரலாற்றுத் தேவை என்றுமில்லாதவாறு இன்று எம்முள் வைக்கப்படுகின்றது
நமக்குள்ள மிகப்பெரும் ஆயுதமாக விரிந்து கிடப்பது தமிழ் தேசிய நினைவு தினம். நாங்கள் நினைவு கூறும் வரைக்கும் எங்களை யாராலும் அழிக்க முடியாது. கழிந்த காலம் எமக்கான எதிர்காலத்தை வடிவமைக்க உதவி செய்கின்றது. தற்போதைய வரலாற்றுக் காலம் பண்பாட்டு மீள் எழுச்சிகான காலம் . ஈழத் தமிழினம் எமக்கான வரலாற்று வேர்களைத் தேடிப் பயணிக்க வேண்டிய காலம் பண்பாட்டு மீள்எழுச்சி ஈழத் தமிழினத்திற்கான பண்பாட்டு அடையாளத்தை செதுக்குகின்றது.
முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின எழுச்சியின் அடையாளம் தமிழின அழிப்பை முள்ளிவாய்க்கால் திடலில் நினைவு கூறுவது மீண்டும் இனத்தின் எழுச்சியை சுட்டு நிற்கிறது ஈழத் தமிழ் இனமாக சிங்கள அரசு அடக்குமுறைக்கு எதிராகவும் சிங்கள ஒற்றை ஆட்சி அரசியல் அழகை தனது புவிசாரணங்களுக்காக தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய பேரரசு கட்டமைப்பின் அடக்குமுறைக்கு எதிராகவும் போராட அணி திரள்வதைத் தவிர வேறு எவ்வித தெரிவும் தமக்கு முன்வைக்கப்படவில்லை.
இரத்தம் தோய்ந்த இம்மண்ணிலிருந்து போராட கனத்த காற்று சுமந்து வரும் அவர்களின் நினைவுகளின் மீதும் நாம் கொண்டிருக்கும் தமிழ் இன விடுதலை நம்பிக்கை மீதம் சபதம் செய்வோம்
01.சிங்கள பௌத்தமயமாக்கப்படும் தமிழ் தாயகத்தை தடுக்கவும் தமிழ் தேசியத்தை நாளாந்த வாழ்வியலாக்கவும்
02. உள்ள தமிழ் இன அழிப்பில் சர்வதேச நீதி வேண்டி அரச பொறுப்பையும் மேற்குலக நாடுகளின் உடந்தை தன்மையையும் வலியுறுத்தி குற்றவாளிகளை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தவும்
03.தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்கு உரியவர்கள் என்பதையும் தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒருபோதும் பாரதீனப்படுத்தவியலாத சுயநிர்ணய அடிப்படையிலும், தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தவும்
04.கூட்டு ஈழத் தமிழர் இருப்பின் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை தடுக்கவும்
05.தமிழ் தேசிய நம்பிக்கையின் உறுதி கொண்டு ஒரு குடையின் கீழ் தமிழின அடக்குமுறைக்கு எதிராக தமிழின விடுதலையை நோக்கி முனைப்புடன் தொடர்ந்து போராட எமது மக்கள் பலத்தை நம்பிக்கும் தொடர்ந்து அடிபணியாது போராடுவோம் என்றுள்ளது.




