இலங்கை கடற்றொழில் திட்டங்களுக்கு உதவ ஜப்பான் தயார்

இலங்கையின் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க ஜப்பான் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ISOMATA Akio தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தூதுவருக்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையே தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது பின்வரும் முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவித் திட்டங்கள் மற்றும் அவற்றை மேலும் வலுப்படுத்துவது குறித்து அமைச்சர் விளக்கமளித்தார்.

கடற்றொழில் அமைச்சின் எதிர்கால இலக்குகள் மற்றும் இலங்கையின் கடல் வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து அமைச்சர் தூதுவரிடம் எடுத்துரைத்தார்.

கடற்றொழில் துறையில் ஜப்பான் பெற்றுள்ள நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சரின் விளக்கங்களைக் கேட்டறிந்த ஜப்பான் தூதுவர், இலங்கையின் கடற்றொழில் துறையை நவீனமயப்படுத்துவதற்கும், புதிய புத்தாக்கத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கும் ஜப்பான் அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும், அதற்கான முழுமையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.