எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் இலக்கு எமக்கு உள்ளது. ஏனெனில் அதிக விலைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யப்படும் போது, பழைய நுகர்வு முறையே தொடர்ந்தால் டொலர்கள் வெளியேறும் அளவு அதிகரிக்கும். நுகர்வைக் குறிப்பிட்ட அளவு குறைக்கும் நோக்கில் சில தீர்மானங்களை எடுத்துள்ளோம். எரிபொருள் தொடர்பான தீர்வுகளை விரைவில் வழங்க முயற்சிப்போம். என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (13) நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மத்திய கிழக்கில் மோதல் நிலை ஆரம்பமானதுடன் பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்கு 98 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டது. மார்ச் மாதத்தில் அது 216 மில்லியன் டொலர்களாகவும், ஏப்ரல் மாதத்தில் 368 மில்லியன் டொலர்களாகவும் அதிகரித்தது.
இந்த மாதம் எரிபொருள் இறக்குமதிச் செலவு 522 மில்லியன் டொலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் எரிபொருள் இறக்குமதி 6 மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. பெரும் சவால்களுக்கு மத்தியிலேயே பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய வேண்டியுள்ளது.
எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தரவுகளின்படி, ஒரு லீட்டர் டீசலின் அடக்கவிலை சுமார் 720 ரூபாவாகும். ஆனால் நாம் அதனை 392 ரூபாவுக்கே வழங்குகிறோம். அரசாங்கம் 100 ரூபா சுமையை ஏற்கிறது. அப்போது கூட்டுத்தாபனத்திற்கு 492 ரூபாவே கிடைக்கிறது. கடந்த கால அரசாங்கங்களின் முறையற்ற முகாமைத்துவத்தால் ஏற்பட்ட 84 பில்லியன் ரூபா நஷ்டத்தை அரசாங்கம் திறைசேரியின் ஊடாகப் பொறுப்பேற்றுள்ளது.
மின்சாரக் கட்டணத்திலும் இதே நிலைதான் காணப்படுகிறது. எரிபொருள் விலை உயர்வால் மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்ட போதிலும், 95 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு அந்த அதிகரிப்பு பாதிக்காத வகையில் நாம் சலுகைகளை வழங்கினோம்.
எவ்வாறாயினும், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபை ஆகியவற்றுக்கு தொடர்ச்சியாக திறைசேரியில் இருந்து பணம் வழங்கி அவற்றை முன்னெடுத்துச் செல்ல முடியாது. அவை வினைத்திறன் மிக்கதாக மாற்றப்பட வேண்டும்.
எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் இலக்கு எமக்கு உள்ளது. ஏனெனில் அதிக விலைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யப்படும் போது, பழைய நுகர்வு முறையே தொடர்ந்தால் டொலர்கள் வெளியேறும் அளவு அதிகரிக்கும். எனவேதான், நுகர்வைக் குறிப்பிட்ட அளவு குறைக்கும் நோக்கில் சில தீர்மானங்களை எடுத்துள்ளோம். எரிபொருள் தொடர்பான தீர்வுகளை விரைவில் வழங்க முயற்சிப்போம். என்றார்.



