முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகள் மற்றும் 2006ம் ஆண்டு ஏ9 வீதி தாண்டிக்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட விவசாயக் கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கு வவுனியாவில் உணர்வுப்பூர்வமான முறையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
வவுனியா, திருநாவற்குளம் 03ம் ஒழுங்கையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை போராளிகள் நலன்புரி சங்கம் மற்றும் தமிழ் தேசிய ஏற்பாட்டாளர்கள் இணைந்து முன்னெடுத்திருந்தனர். நிகழ்வின் ஆரம்பத்தில் போரில் மடிந்த உறவுகளுக்காகவும், படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்காகவும் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மலர் அஞ்சலியும் இடம்பெற்றிருந்தது.
இதன்போது போர்க்காலத்தின் வலிகளையும் பட்டினியையும் நினைவூட்டும் குறியீடாக அமைந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், பொதுமக்களிற்கும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மததலைவர்கள், தமிழ் அரசியல் கட்சியிகளின் உறுப்பினர்கள், பொது அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து, நாவிதன்வெளி பிரதேசசபையின் அமர்வு இன்று (13) உணர்வுப்பூர்வமான நினைவேந்தல் மௌன அஞ்சலியுடன் நிகழ்த்தப்பட்டது.
நாவிதன்வெளி பிரதேச சபையின் 11ஆவது மாதாந்த அமர்வு தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் முற்பகல் 9:30 அளவில் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, உயிரிழந்த உறவுகளுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து சபையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விலே மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு வழமை போன்று நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை பரிமாறுகின்றவர்கள் கஞ்சியை சுவையாக வழங்க வேண்டும் என்பதற்காக கஞ்சியில் பல பொருட்களை சேர்ப்பதாகவும் பொதுக்கட்டமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனவே முள்ளிவாய்க்கால் கஞ்சியை எதற்காக வழங்குகின்றோம் என்பதை உணர்ந்து முள்ளிவாய்க்காலில் எவ்வாறு அரிசி, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை மட்டும் கொண்டு கஞ்சி தயாரித்து வழங்கப்பட்டதோ அவ்வாறே முள்ளிவாய்க்கால் கஞ்சியை சரியான முறையில் பரிமாறுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வியாபார நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



