அத்துமீறிய காணி அபகரிப்பு: கனடா மற்றும் பிரித்தானியாவிடம் எடுத்துரைப்பு

கனடா மற்றும் பிரித்தானியா உயர்ஸ்தானிகர்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி குழுவினர் இன்று (04) மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது சமகால அரசியல் தொடர்பாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தொல்லியல் திணைக்களத்தினால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக உயர்ஸ்தானிகர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

தொல்லியல் திணைக்களத்தினால் தமிழர்களின் காணிகள் திட்டமிடப்பட்டு கபளீகரம் செய்யப்படுகின்றது.

தமிழர்களுக்கு ஒரு சட்டமும், சிங்களவர்களுக்கு இன்னுமொரு சட்டமும் பிரயோகிக்கப்படுவது தொடர்பாகவும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை மற்றும் வனக்காணிகள் தொடர்பாக தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற அநீதிகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்குவதில் அரசாங்கம் பாரபட்சம் காட்டுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.

கிராமங்களில் உள்ள மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் பல இருக்கின்ற போது அரசாங்கம் மக்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறி தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றமை தொடர்பாகவும் உயர்ஸ்தானிகர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.