ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழர்கள் மீளுறுதி செய்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஐம்பதாவது ஆண்டு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 389

முதலில் அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள். ஈழத்தமிழர்கள் அனைத்து தொழிலாளர்களும் சமத்துவமாகச் சகோதரத்துவமாக சுதந்திரமாகத் திறமைக்கான உழைப்பும் உழைப்புக்கான கூலியும் பெறும்  சமுகமாக தங்கள் சமுகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகவே சோசலிசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் உலகின் தொழிலாளர் அமைப்புக்களுடன் ஈழத்தமிழர்கள் தங்களுடைய உறவை வளர்க்க சரியான முறையில் திட்டமிட்டு செயற்பட வேண்டுமென இலக்கு அழைக்கிறது.
மேலும் 14.05. 2026 அன்று பண்ணாகம் தமிழர் விடுதலைக் கூட்டணி மாநாட்டில் 14.05.1976 இல்  ஈழத்தமிழர்கள் தங்கள் இறைமையை மீளுறுதி செய்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்  50 வது ஆண்டு வருகிறது.வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வரலாற்றுப் பரிணாமத்தை அறிவூட்டலாக மீள்வாசிப்பு செய்வதே இன்றைய ஆசிரிய தலையங்கத்தின் நோக்காகிறது. இது இன்று ஈழத்தமிழர்கள் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பதற்கான கருத்தியலை உருவாக்கும் என்பது இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.
முதலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் சாரம் வருமாறு :- “ 14.05. 1976 இல் வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் உள்ள பண்ணாகமத்தில் கூடுகின்ற தமிழர் விடுதலைக் கூட்டணியினராகிய எமது முதலாவது தேசிய மாநாடு பின்வருவனவற்றை இத்தால் பிரகடனப்படுத்துகிறது. தமது பெருமைமிகு மொழியாலும் சமயத்தாலும் தனியான பண்பாட்டாலும் பாரம் பரியத்தாலும் தனியான அரசில் பல நூற்றாண்டுகளாக வரையறுக்கப்பட்ட தனியான நாட்டெல்லைகளில் இலங்கையில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களாகிய நாங்கள் காலனித்துவ ஆட்சிக்கு எமது தாயகம் உட்படும் வரை சிங்களவர்களில் இருந்து வேறுபட்ட தேச மக்களாக வாழ்ந்து வந்தோம். சிங்களவர்களின் 1972ம் ஆண்டு அரசியலமைப்பு தமிழ்த்தேச இனத்தை சிங்களக் காலணித்துவத்துள் வாழும் அடிமைகளாக மாற்றி தமிழர்களின் நாட்டெல்லைக்குள்ளேயே அவர்களின் மொழியை குடியுரிமையை பொருளாதார வாழ்வை வேலைவாய்ப்புக்களைக் கல்வியை அழித்து அவர்களது எல்லா தேசியத்துக்குரிய உட்கட்டுமானங்களையும் இல்லாமலாக்கி அவர்களைத் தேச இனத்தன்மையை நீக்கம் செய்கிறது.  இந்நிலையில் இந்த மாநாடு தமிழ்த்தேச இனம் தன்னைப் பாதுகாப்பதற்கான தனது தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தமிழீழம் என்னும் சுதந்திரமான இறைமையுள்ள சோசலிச அரசாக தன்னை மீளக்கட்டமைக்க உறுதி எடுக்கிறது என்பதனை உலகுக்குப் பிரகடனப்படுத்துகிறது”.
இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முன்னர் இரண்டு முக்கிய ஈழத்தமிழர் வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்றன.  முதலாவது, 1972ம் ஆண்டு சிங்கள பௌத்த குடியரசு அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டவுடனேயே அதனை ஈழத்தமிழர்கள் ஏற்கவில்லையென்பதை உலகுக்கு வெளிப்படுத்த, ஈழத்தமிழர்களின் அக்கால அரசியல் தலைமையாக விளங்கிய அகில இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சாமுவேல் யேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் தனது காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து அத்தேர்தலை அதற்கான அடையாளக் குடியொப்பமாக அறிவித்து 1974 வரை தேர்தலை இழுத்தடித்து 1974இல் அதனை சிறிலங்கா நடாத்திய பொழுது அதில் பல்லாயிரம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று மக்கள் ஆணையின் அடிப்படையில் சிறிலங்கா குடியரசை நிராகரித்தார். இரண்டாவது  1974ம் ஆண்டு சிறிலங்கா தேசிய சபைக்கு காங்கேசன்துறை அடையாளக் குடியொப்ப வெற்றியின் அடிப்படையில் சென்று அங்கு தமிழர்கள் பிரித்தானிய காலனித்துவத்திடம் இருந்து அரசியல் விடுதலை பெறவே காலனித்துவத்துக்கு எதிரான போராட்டத்தை சிங்களர்களுடன் இணைந்து நடாத்தினார்கள் என்பதைத் தெளிவுபடுத்தினார். ஆனால் பிரித்தானியக் காலனித்துவம் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சி முறைமைக்குள் ஈழத்தமிழர்களின் இறைமையை அவர்களின் விருப்பின்றி இணைத்து சிங்கள நவகாலனித்தவத்தை உருவாக்கிய 04.02. 1948 முதல் 22.05. 1972 வரை ஈழத்தமிழர்கள் எல்லா சனநாயக வழிகளிலும் தங்களின் அரசியல் உரிமைகளை மீட்டெடுக்க பலவழிகளில் முயற்சித்தும் பலன் எதுவும் இல்லாமல் போனதால் ஈழத்தமிழர்கள் சிறிலஙகாவின் தேசிய சபை ஆட்சியில் இருந்து முற்றாக விலகித் தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே நிர்ணயிப்பார்கள் என்று தெட்டத் தெளிவாகப் பிரகடனப்படுத்தி அச்சபையின் உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் எடுக்காது வெளியேறினார்.
இந்த இரண்டு முக்கிய வரலாற்று மாற்றங்களும் நடைபெற்ற அதே காலகட்டத்தில் தமிழ் இளையவர்கள் அவர்களைக் காரணமின்றிக் கைதுசெய்து விசாரணையின்றி தடுத்துவைக்க சிறிமாவோ அரசாங்கம் பொலிசாரையே இராணுவமாகச் செயற்பட அனுமதித்த பின்னணியில் மக்களின் உயிரையும் உடமைகளையும் நாளாந்த வாழ்வையும் காக்க ஆயுத எதிர்ப்பை வெளிப்படுத்தும் போராளிக்குகுழுக்களாகப் பெருவளர்ச்சி பெற்றனர். இந்த இளைஞர் கொடுத்த அழுத்தங்களின் அடிப்படையிலேயே தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் தங்களின் தனித்துவங்களுடன் கூட்டணியாக இணைந்து முதலில் தமிழர் கூட்டணியாகவும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியாகவும் மாறினர். அதே வேளை 1972 இல் புதிய புலிகள் என  இயங்கி வந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அமைப்பு தன்னை 1976 இலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் என்னும் அமைப்பாகப் பெயர் மாற்றம் செய்தது.
1977 பொதுத்தேர்தல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான தமிழர் தாயகம் தழுவிய குடியொப்பமாக அமைக் கப்பட்டது. இந்த 1977 தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் கொள்கைத் திரட்டு, “ தமிழ்த்தேச இனம் அதனது தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களின் தாயகத்தில் இறைமையை நிலைநிறுத்த முடிவுசெய்துள்ளது. இதனை சிங்கள அரசாங்கத்திற்கும் உலகிற்கும் அறிவிக்க ஒரே வழியாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வாக்களிப்பதே  தமிழர்  உலகுக்கு உள்ளது.  இந்த வாக்குகளால் தெரிவாகும் தமிழ் பேசும் பிரதிநிதிகள் இலங்கையின் தேசிய சபையின் உறுப்பினர்களாகும் அதே நேரத்தில் தம்மை தமிழீழத்தின் தேசிய சபையின் உறுப்பினராகவும் தம்மைக் கட்டமைத்து தமிழீழ அரசின் அரசியலமைப்பை வரைந்து  சமாதான முறையிலோ அல்லது வேறெந்த நேரடி நடவடிக்கைகள் மூலமோ அதனை செயற்படுத்திச்  சுதந்திர தமிழீழ அரசை அமைப்பர்” என அறிவித்துப் பல்லாயிரம் தமிழ் மக்களின் வாக்குகளால் மக்களாணையாக வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மாற்றியது என்பது வரலாறு.
எனவே வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது ஈழத்தமிழரின் இறைமையை மீளுறுதி செய்து அவர்களின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அவர்களது வரலாற்றுத் தாயகத்தில் அவர்களுக்கான பாதுகாப்பான அமைதியுடன் கூடிய வளர்ச்சிகளை உருவாக்கும் ஈழத்தமிழர்களின் அடிப்படை மனித உரிமையான தன்னாட்சி உரிமையினை நடைமுறைப்படுத்தும் ஆணையாகவே உள்ளது. இதன் அடிப்படையிலேயே சமா தான முறைகளைச் சிறிலங்கா நிராகரித்து தனது படைபலம் கொண்டு மக்கள் மேலான யுத்தத்தையும் அரச பயங்கரவாதச் செயல்களையும் வேகப்படுத்தி இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனவழிப்பு அரசியல் மூலம் ஈழத்தமிழர்களின் தாயகத்தில் அவர்களது உயிருக்கும் உடமைகளுக்கும் நாளாந்த வாழ்வுக்கும் இனங்காணக்கூடிய அச்சத்தையே வாழ்வாக்கிய பொழுது தேசியத்தலைவர் தலைமையில் 31 ஆண்டுகால நடை முறையரசை ஈழத்தமிழர்கள் கட்டமைத்தார்கள் என்பது வரலாறு.
இந்த நடைமுறையரசைத் தான் சிறிலங்காவின் எல்லாச் சிங்களத் தலைமைகளும் ஒன்றுபட்டு 18.05.2009 முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பின் மூலம் தேசமாகவே 146000 ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்து ஈழத்தமிழர்களின் மேல் அனைத்துலகச் சட்டங்களை மீறி அனைத்து மனிதச் சித்திரவதைகளையும் செய்து ஈழத்தமிழர்களின் அனைத்து உட்கட்டுமானங்களையும் அழித்து மீளவும் சிங்கள படைபல ஆக்கிரமிப்பை ஈழத்தமிழர் தாயகத்தில் நிறுவினர். இன்று 17 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் பாதிக்கப்பட்ட எந்த வொரு ஈழத்தமிழர்களுக்கான பரிகார நீதியோ அல்லது இனஅழிப்பைச் செய்தவர்களுக்கான தண்டனை நீதியோ வழங்கப்படவில்லையென்பது இன்றைய வரலாறாக உள்ளது.
அதே நேரத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் பிரிவினையல்ல அதனை அடைவதற்கு ஈழத்தமிழர்களின் முயற்சி பயங்கரவாதமுமல்ல. இந்த உண்மைகளை உலகு உணர்வதற்கு வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஈழத்தமிழர் வரலாற்றின் பரிணாம வளர்ச்சி என்பதையும் அது சிங்களவர்களுக்கோ முஸ்லீம்களுக்கோ மலையகத் தமிழர்களுக்கோ எதிரான தல்லவென்பதையும் அறிவார்ந்த முறைகளில் எடுத்துரைக்க வேண்டிய காலமாக இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஐம்பதாவது ஆண்டை ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் அனைத்துப் புலம் பதிந்து வாழும் நாடுகளிலும் முன்னெடுக்க இலக்கு அழைக்கிறது.
அவ்வாறே ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினை என்பதே ஈழத்தமிழர்கள் தங்களின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் தங்களின் வரலாற்றுத் தாயகத்தில் “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்ற மக்கள் இறைமை வழி தங்களது தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களுக்கான பாதுகாப்பான அமைதியுடன் கூடிய வளர்ச்சிகளைப் பெறுவதற்கான தடைகளை அகற்றுதல் என்பதை இன்றைய ஈழத்தமிழர்களின் அரசியல்வாதிகள் அரசியல் செயற்பாட்டாளர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலான தன்னாட்சி உரிமையை மையப்படுத்தி தங்களின் அரசியல் தீர்வு முயற்சிகளை முன்னெடுக்க முயல வேண்டுமென்பது  இலக்கின் வலியுறுத்தலாக உள்ளது.
ஆசிரியர்

Tamil News