போதைப்பொருட்களுடன் 22 பிக்குகள் கைது: மகாநாயக்க தேரர்களுடன் புத்தசாசன அமைச்சு சந்திப்பு

கட்டுநாயக்க  சர்வதேச வானூர்தி நிலையத்தில் பெரும் தொகையிலான போதைப்பொருட்களுடன் 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், புத்தசாசன அமைச்சு இன்று (28) மகாநாயக்க தேரர்களுடன் விசேட கலந்துரையாடலை நடத்தவுள்ளது.

சியாம், அமரபுர மற்றும் ராமஞ்ஞ ஆகிய மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடன் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. சேனாதீர தெரிவித்தார்.

கடந்த 26ஆம் திகதி தாய்லாந்திலிருந்து வருகை தந்த 22 பிக்குகள், சுமார் 110 கிலோகிராம் ‘குஷ்’ (Kush) மற்றும் ‘ஹேஷ்’ (Hash) போதைப்பொருட்களை பயணப் பொதிகளில் மறைத்து வைத்திருந்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 22 பேரும் நீர்கொழும்பு மேலதிக நீதிவான் சுபாணி அபேசேகர முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தேநேரம், கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளில் 20 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் பிரதான சந்தேக நபரான மற்றுமொரு பிக்கு மீகஹவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது அவர் போதைப்பொருள் பாவித்திருந்தமை மருத்துவ அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.