எதிர்வரும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்களை, தையிட்டி விகாரை விவகாரத்திற்கு எதிரான ஒரு பாரிய எழுச்சிப் போராட்டமாக வெளிப்படுத்துமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். வடமராட்சி கிழக்கில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், மே முதலாம் திகதி தொழிலாளர் தினமாகவும் சிங்கள மக்களின் பௌர்ணமி தினமாகவும் அமையும் ஒரு முக்கிய நாளில் இந்த எதிர்ப்பைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
பொதுவாகக் காணிகள் விடுவிக்கப்படும் போது அவை நில அளவீடு செய்யப்பட்டு மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்ட பின்னரே உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற நடைமுறை இருக்கிறது. எனினும், இம்முறை தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பாக அரசாங்கம் ஒரு சூழ்ச்சிகரமான நகர்வை மேற்கொண்டதாக அவர் குற்றம் சுமத்தினார்.
காணி அளவீடு செய்யப்படும் போது மக்கள் அதனை எதிர்த்தால், மக்கள் காணி விடுவிப்பதைத் தடுத்தார்கள் என்ற காரணத்தைக் கூறி அந்த காணியை நிரந்தரமாக அபகரிப்பதே அந்தச் சூழ்ச்சியின் நோக்கமாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், மக்கள் காணி அளவீட்டிற்குச் சம்மதம் தெரிவித்ததால் அரசாங்கத்தின் அந்தத் திட்டம் தோல்வியடைந்தது. இதன் காரணமாகவே தையிட்டி விகாரையின் விகாராதிபதி ஊடாகப் பலாலி காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்ய வைக்கப்பட்டு, காணி அளவீட்டு நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டதாக காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இத்தகைய நில அபகரிப்பு முயற்சிகளுக்கு எதிராக மக்கள் தங்களது பலமான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



