மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சாதகமான பதில்: இந்தியத் துணை ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளதாக இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதிக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே இந்தத் தகவல் பகிரப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் புதுடில்லியின் நிலைப்பாடு உறுதியாக இருப்பதாகவும், அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் இந்தியத் துணை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, மாகாண சபைத் தேர்தல்கள் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் சூழலில், அதனை விரைந்து நடத்துவது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் தாம் ஆலோசனை நடத்தியதாகவும், அதற்கு ஜனாதிபதி சாதகமான பதிலளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் புளொட் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் செல்வராஜா கஜேந்திரனும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.