மே தினக் கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த ஐ. ம.சக்தி தீர்மானம்!

ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை மே தினக் கூட்டத்தை கொழும்பில் பிரம்மாண்டமான முறையில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த மே தினக் கூட்டத்தை கொழும்பு, பொரள்ளை பகுதியில் அமைந்துள்ள கெம்பல் பார்க் மைதானத்தில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.

இதற்காக கொழும்பு மாநகர சபையிடம் முறையான அனுமதி கோரப்பட்டுள்ளது. இருப்பினும், மாநகர சபையிடமிருந்து இதற்கான இறுதி அனுமதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை மே தினத்தை முன்னிட்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பொதுவானதொரு மே தினக் கூட்டத்தை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தனது இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளது.

இரு தரப்பினரும் இணைந்து செயற்படுவதன் மூலம் தற்போதைய அரசியல் சூழலில் ஒரு வலுவான செய்தியை வழங்க முடியும் என கட்சி தலைமைத்துவம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த ஒன்றிணைந்த மே தினக் கொண்டாட்டம் குறித்து ஐக்கிய தேசிய கட்சியிடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வமான பதில் எதுவும் வழங்கப்படவில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆராய்வதற்கும், மே தின ஏற்பாடுகள் தொடர்பில் இறுதி முடிவுகளை எடுப்பதற்கும் அக்கட்சியின் மத்திய குழு இவ்வாரம் கூடி ஆலோசிக்க உள்ளது.

இந்தச் சந்திப்பின் போதே, ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை ஏற்றுக்கொள்வதா அல்லது தனித்து மே தினத்தை முன்னெடுப்பதா என்பது குறித்த தீர்க்கமான முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.