இலங்கையில் கடந்த 12ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கியதன் காரணமாக 26 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றைய தினமும் (17) நாட்டின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற அனர்த்தங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மிஹிந்தலை – மருதங்குளம் குளத்தில் நீராடச் சென்ற 55 வயதுடைய நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவரது 11 வயது மகனும் மற்றுமொரு 12 வயது சிறுவனும் குளத்தில் நீராடிக்கொண்டிருந்தபோது திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.
அவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தந்தை குளத்தில் குதித்த நிலையில், சிறுவர்கள் இருவரும் எவ்வித ஆபத்துமின்றி காப்பாற்றப்பட்டனர். எனினும், பிள்ளைகளைக் காப்பாற்றிய தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, தெஹிஓவிட்ட – ஹிங்குரலகந்த பகுதியில் ஆற்றில் நீராடச் சென்ற 17 வயது இளைஞன் ஒருவனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தனது உறவினர்களுடன் தெஹிஓவிட்ட பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்த போதே, குறித்த இளைஞன் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
முன்னதாக, குருணாகல் பகுதியில் ஆற்றில் நீராடச் சென்ற ஒரு குழுவினர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் இரு சிறுவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
இந்தநிலையில், சித்திரை புத்தாண்டு விடுமுறைக் காலப்பகுதியில் நீர்நிலைகளில் நீராடும்போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர்.



