இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, தமிழ்த் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையிலான புதிய அரசியல் தீர்வுத்திட்ட வரைபை தயாரிக்கும் பணிகளை ‘ஈழத் தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை’ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் அரசறிவியற்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி தி. விக்னேஸ்வரனை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு இந்தச் செயன்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் யாழ். நல்லூரில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், தற்போதைய அனுரகுமார திசநாயக்க அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் ‘ஏக்ய ராஜ்ய’ எனப்படும் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை முற்றாக நிராகரிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திம்புக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு, தமிழர் தேசத்திற்கும் சிங்கள தேசத்திற்கும் இடையில் ஒரு சமூக ஒப்பந்தத்தை உருவாக்குவது மற்றும் விரிவான கூட்டாட்சித் தீர்வுத்திட்ட வரைபை தயாரிப்பது ஆகியன இக்குழுவின் முதன்மை நோக்கங்களாகும்.
வடக்கு – கிழக்கு தாயகம் மற்றும் புலம்பெயர் தேசத்து நிபுணர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்படவுள்ள இந்த உத்தேச வரைபு, பொதுமக்களின் கருத்துப் பெறலுக்காக வெளியிடப்பட்டு, எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இறுதி வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஈழத் தமிழர்களின் ஏகோபித்த அரசியல் நிலைப்பாடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



