50 ஆண்டுகளுக்கு முன்பு 1976 ஈழத்தமிழர்களின் அன்றைய அரசியல் தலைமைகளில் முக்கியமானவராக விளங்கிய தமிழரசுக்கட்சியின் அக்காலத் தலைவரும் முன்னாள் காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினருமான சாமுவேல் யேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களின் காங்கேசன்துறை முதல் யாழ்ப்பாணம் வரையிலான இறுதி ஊர்வலத்தில் யாழ்ப்பாணத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக 1977இல் பின்னர் தெரிவான வெற்றிவேலு யோகேஸ்வரன் அவர்களுடன் நடந்து வந்து கொண்டிருந்த வேளை அவர் எனக்குக் கூறினார் “ இனி யாழ்ப்பாணம் லெபனான்தான்” என்று. ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள் என விளக்கம் கேட்ட பொழுது இஸ்ரேல் உடைய நோக்கும் போக்கும் லெபனானின் இறைமையுள்ள நிலப்பரப்பைப் படிப்படியான போரின் மூலம் தனதாக ஆக்கிரமிப்பதேயாகும். இதே வேலையைத் தந்தை செல்வாவின் மறைவு சிங்களவர்கள் ஈழத்தமிழர் தாயகத்தை மேலும் மேலும் ஆக்கிரமிப்பதற்கான “ஈழத்தமிழர்கள் மேலான மக்கள் மேலான போரினை” அனைத்துலக சட்டங்களை மீறி நடத்துவதை ஊக்குவிக்கப்போகின்றது எனக் கூறினார். ஈழத்தமிழர்களின் கடந்த 50 ஆண்டுகால வரலாற்றை நோக்குபவர்கள் எவருக்கும் யோகேஸ்வரன் அவர்களின் அரசியல் எதிர்வு கூறல் எவ்வளவு தூரம் நடைமுறையில் உண்மையானதெனத் தெளிவாக விளங்கும்.
இன்று அமெரிக்கா-ஈரான் இடை சீனாவின் தூண்டுதலுடன் கூடிய பாக்கிஸ்தானின் ராஜ தந்திரம் 14 நாள் யுத்த நிறுத்தத்தை தற்காலிகமாக ஏற்படுத்திய போதிலும் இந்தப் போர்நிறுத்த உடன் பாட்டில் லெபனான் அடங்கவில்லையென இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாகு லெபனான் மேல் மூர்க்கத்தனமான குண்டு வீச்சுக்கள் எறிகணை வீச்சுக்களை நடாத்தி 254 லெபனேனியர்களையும் பல லெபனேனிய வளநகரங்களையும் மக்களின் இரத்த வியர்வையின் உழைப்பில் உருவான மாடிக் கட்டிடங்களையும் வீடுகள் மாடிக்கட்டிடங்கள் தொழில் செய் கட்டிடங்கள் மேல் நெருப்பை அள்ளி வீசி லெபனானையே எரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெயரளவில் லெபனான் இஸ்ரேல் உடன் நேரடியாகப் பேவேண்டும் என்று எவ்வாறு 2009 இல் ஈழத்தமிழர்களின் டீபக்ரோ என ஆங்கிலத்தில் சுட்டப்படும் நடைமுறையரசு தேயூர் என ஆங்கிலத்தில் சுட்டப்படும் சட்ட ஆட்சியாக பரிணாமமடைந்து வந்த இறைமையை ஒடுக்க ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண வன்னியரசுகளின் நிலப்பரப்பில் இருந்த அனைத்து உட்கட்டுமானங்களையும் இவ் வாறே தொடரச்சியாக குண்டுவீச்சுக்கள் எறிகணை வீச்சுக்கள் மூலம் தாக்கியழித்து மக்களை நிர்வாணப்படுத்தி அனைத்துவிதமான மனிதச் சித்திரவதைகளையும் போர் அற்ற சூனியப் பிரதேசமென தானே அறிவித்த பாதுகாப்பு பிர தேசங்களுக்கு மக்களை வரவைத்து இன அழிப்பு செய்து 146000 ஈழத்தமிழர்களைத் தேசமாகவே இனப்படு கொலைகளுக்கு உள்ளாக்கி ஈழத்தமிழரின் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு அவர்களுக்கான சனநாயக அரசாங்கமென சிறிலங்கா அரசாங்கம் கடந்த 17 ஆண்டுகளாக ஈழத்தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு எந்தவொரு நடைமுறைத் தீர்வையுமோ அல்லது சிறிலங்காவின் மக்கள் மேலான யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கோ அல்லது சிறிலங்காவிடம் உத்தியோகபூர்வமாகச் சரணடைந்தவர்களுக்கோ அல்லது சிறிலங்காவால் வலிந்து காணாமல் ஆக்கப் பட்டவர்களுக்கோ எந்தவொரு பரிகாரநீதியையோ அல்லது அந்த அனைத்துலக சட்டங்களுக்கு எதி ரான குற்றங்களை இழைத்தவர்களுக்குத் தண்டனை நீதியையோ வழங்காது தனது சிறிலங்காப் பாராளுமன்ற கொடுங்கோன்மை ஆட்சியை அந்த இனஅழிப்பைச் செய்தவர்களையே அமைச்சுக்களின் தீர்மானமெடுக்கும் அதிகாரிகளாக நியமித்து ஈழத்தமிழர்களின் இறைமையையும் தேசியத்தையும் தன்னாட்சி உரிமையையும் ஒடுக்கி அதனை சிறிலங்காவின் பாதுகாப்புக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்குமான தேசிய பாதுகாப்புச் செயற்பாடாக அறிவித்து 1979 முதலான பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமென புதிய விளக்கமளித்து நிகழ்நிலைச் சட்டங்களைக் கொண்டு வந்து ஊடகச் சுதந்திரத்தையும் மக்களின் சனநாயக ரீதியான எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமைகளையும் பறித்து இதுதான் தேசிய மக்கள் சக்தி அரசினதும் மாற்றத்துக்குரிய ஆட்சியென உலகுக்கு வெளிப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சிறிலங்கா அவசரகாலச் சட்டத்தை அமெரிக்க இஸ்ரேல் ஈரான் போரைச் சாட்டாக வைத்து நீடிப்பது என்பது ஈழத்தமிழர்களின் அத்தியாவசிய தேவைகளை அவர்களைத் தங்களின் குடிகளாக கூறும் சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றாது விடுவதை ஏற்றக்கொள்ள இயலாதென அம்பாறை மாவட்டத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரன் கோடீஸ்வரன் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளமை எவ்வளவு தூரத்துக்குத் தேசிய மக்கள் சக்தி அரசிலும் ஈழத்தமிழர்கள் பாதிப்படைகின்றார்கள் என்ற சமகாலக் குரலாக உலகெங்கும் புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்களால் இப்பிரச்சனை உலமயமாக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது என்பது இலக்கின் கருத்தாக அமைகிறது.
ஏனெனில் தேசிய மக்கள் சக்திக்கு உள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மற்றைய சிங்களக் கட்சிகளும் அவசரகாலச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் 137 க்கு 27 வாக்குகள் பதியப்பட்டு 110 மேலதிக வாக்குகளால் அவசரகாலச்சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஈழத்தமிழர்கள் நாட்டின் சட்டவாக்கத்தில் பங்கேற்க இயலாத இந்தச் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமை மற்றப்படாதவரை ஈழத்தமிழர்கள் சட்டரீதியாகவே இறைமையொடுக்கம் தேசிய ஒடுக்கம் அடையும் நிலை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதால் ஈழத்தமிழரின் நீதிக்கான குரலாக உலகில் பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள் செயற்பட்டேயாக வேண்டும். இதற்கான அமைப்பினை புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள் தங்கள் சட்டத்துறை விற்பன்னர்களின் துணையோடு சமுகத்தையும் இளையவர்களையும் உள்ளடக்கி உரு வாக்க வேண்டும் என்பது இலக்கின் வேண்டுகோளாகவுள்ளது.
இவ்வாறு இறைமையை ஒடுக்கப் போரை ராஜதந்திரமாக நேற்று ஈழத்தமிழர்களின் மேல் சிறிலங்கா பயன்படுத்திய பொழுது உலகம் மௌனமாக இருந்தமையே இன்று லெபனானில் ஈரானில் நேற்று பலஸ்தீனத்தில் பல ஆண்டுகளாக உக்ரேனில் இறைமையை ஒடுக்கப் போரும் ராஜதந்திரமாக முன்னெடுக்கப்படும் வரலாறாகத் தொடர்ந்து கொண்டிருப்பதற்கான மூலகாரணமாகிறது என்பதை உலக மக்களுக்கு புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள் தெளிவுபடுத்த வேண்டிய காலகட்டமிது என்பதை இலக்கு எடுத்துரைக்க விரும்புகிறது. ட்ரம்பின் தலைமையிலான இரண்டாவது ஆட்சிக்காலம் அமெரிக்காவில் ஆரம்பமானது முதல் அமெரிக்கா உலகின் எரிபொருள் வளத்தை தனதாக்க போரினையே ராஜதந்திரமாக முன்னெடுத்து வருவது ஈழம் முதல் இஸ்ரேல் வரையான உலக ஆக்கிரமிப்பு அரசுகளுக்கு ஊக்கசக்தியை அளித்து வருகிறது. சிறிலங்கா முதல் இஸ்ரேல் வரை தமது அயலில் வாழும் மக்களின் எல்லைகளைத் தமதாக்கி தங்களின் ஆட்சிப்பரப்பை அகலப்படுத்தல் என்பது அனைத்துலக சட்டங்களால் தடுக்கப்படாத தொடர்கதையாக நீண்டு கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலக சட்டங்கள் வழியான நீதி வழங்கப்படாத வரை உலகின் மற்றைய நாடுகளிலும் போரை இறைமை ஒடுக்கத்துக்கான ராஜதந்திரமாகப் பயன்படுத்தல் தொடர்ந்து கொண்டே இருக்குமென்பது இலக்கின் கருத்தாகவுள்ளது.
பிரித்தானியாவின் கிறீன் கட்சியெனப்படும் பசுமைக்கட்சியின் தலைவர் சக் பொலன்சி அவர்கள் பிரித்தானிய அரசாங்கம் இஸ்ரேல் மேல் எந்தவொரு வர்த்தகக் கட்டுப்பாட்டையோ மேற்கொள்ளாது இஸ்ரேல் ராஜதந்திரிகளுக்கான சிறப்பு உரிமைகளை அனுபவிக்க அனுமதிக்கும் கட்டுப்பாடற்ற நிலையை மாற்றி இஸ்ரேல் உடனான வர்த்தக உடன்பாடுகளை மீளப்பெறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்படியான ஒரு வேண்டுகோளை பிரித்தானியத் தமிழர்களின் அரசியல் செயற்பாட்டாளர்களால் ஏன் விடுக்க இயலவில்லை என்பதே இலக்கின் இவ்வாரக் கேள்வியாக உள்ளது. ஊடகவியலாளர்கள் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தும் பொறுப்பினையே செய்யும் கடப்பாடு உள்ளவர்கள். ஆனால் சில அரசியல் செயற்பாட்டாளர்கள் ஊடக வியலாளர்களை இவற்றுக்கான தீர்வுகளையும் நீங்களே காண வேண்டுமெனக் கருத்துத் தெரிவித்து நடைமுறை எதார்த்தத்தை வெளிப்படுத்தும் பொறுப்பில் இருந்து விலகி அரசியல் செய்யச் சொல்வது அவ்வாறு கூறுபவர்களின் அரசியல் அறிவின் வறுமையையே காண்பிக்கிறது என்பது இலக்கின் கருத்தாகவுள்ளது. அரசியல் செயற்பாட்டாளர்கள் இணைந்து உங்களுக்கான ராஜதந்திரக் கவுன்சில் ஒன்றை ராஜதந்திரத்தில் அனுபவமுள்ள சமுகத்தினரைக் கொண்டு கட்டியெழுப்பி அதற்கு அமையச் செயற்படுவது ஒன்றே போரை ராஜதந்திரமாகப் பயன்படுத்தும் இன்றைய உலகில் ஈழத்தமிழர்கள் தங்களின் இறைமையையும் தேசியத்தையும் தக்கவைக்க ஓரே வழியென்பதே இலக்கின் ஆணித்தரமான கருத்தாகவுள்ளது.
ஆசிரியர்




