மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் செயலகத்திடமிருந்து தகவல்களைக் கோரியுள்ளது.
குறித்த விசேட பாராளுமன்றக் குழு அதன் தலைவர் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த தேர்தல்கள் செயலகத்தின் அதிகாரிகள், மாகாணசபைத் தேர்தல்கள் சட்டம் திருத்தப்பட்டு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் ஏற்படுகளுக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வட்டார எல்லைகளை தீர்மானிக்கும் நடைமுறை இதுவரையில் பூர்த்திசெய்யப்படவில்லை என்று சுட்டிக்காட்டினர்.
வட்டார எல்லை நிர்ணய அறிக்கைக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்காமையால், குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கையாக சபாநாயகரினால் பிரதமரின் தலைமையில் ஐவரைக் கொண்ட மீளாய்வுக் குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தக் குழுவின் அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டும் என்றபோதும், அவ்வாறானதொரு அறிக்கை கையளிக்கப்படவில்லையென தேர்தல்கள் செயலகத்தின் அதிகாரிகள் இக்குழுவில் தெரிவித்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த குழுவின் உறுப்பினர்கள், மாகாணசபைத் தேர்தல் தொடர்பான அடிப்படைச் சட்டத்தை மீண்டும் இயற்றுவதன் மூலம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வினவினர்.
2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தை இரத்துச் செய்து மீண்டும் அடிப்படைச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்தது. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனால் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணையில் முன்னைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.



