அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (10) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
பயிற்சிக்கு பின்னர் வைத்தியர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் சுகாதார அமைச்சு தமக்கு வழங்கிய உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றது.
குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்ததுடன், நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
எனினும், வெளியிடப்பட்டுள்ள நியமனப் பட்டியலை உடனடியாக நீக்கி, இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்தி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நியாயமற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள். இவர்களுடன் இனி எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை. அரசாங்கம் என்ற அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.வரையறுக்கப்பட்ட பயிற்சிப் பெற்ற வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட முதல் நியமனத்தில் ஏதேனும் குறைகள் காணப்பட்டால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நீதிமன்றம் செல்லலாம். இரு தரப்பின் விடயங்களையும் ஆராய்ந்து நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கும். நியாயமற்ற பணிப்புறக்கணிப்பால் மக்களை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.



