அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (07) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். தற்போதைய உலகப் போர்ச் சூழலினால் நாட்டின் பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் அது குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
இதன்போது எரிபொருள் மற்றும் வலுசக்தி குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எரிபொருள் செலவினங்களுக்கு ஏற்ப விலைகளைத் திருத்தியமைக்கும் போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும், சந்தைப் பெறுமதிக்கு இணங்க, தற்போது ஒரு லீற்றர் டீசலின் விலை 600 ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
“எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி அல்லது அதற்கடுத்த அண்மைய தினமொன்றில் எரிபொருளுக்கான புதிய செலவு அடிப்படையிலான விலைக் சூத்திரத்தை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்தச் செலவு முந்தைய மாதத்தின் உண்மையான தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
இதேவேளை, அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தின் போது, உண்மையான செலவைக் கணக்கிட்டு, ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாய் வரை மானியம் வழங்கவும், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாய் வரை மானியம் வழங்கவும் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அறிவித்தார்.
இதன்படி கணக்கிடும் போது, ஒரு மாதத்திற்கு 20 பில்லியன் ரூபாய், அதாவது 2,000 கோடி ரூபாய் செலவாகும். மூன்று மாதங்களுக்கான இந்த முன்மொழிவை தங்களது அரசாங்கம் தயாரித்துள்ளதாகவும் இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கே இந்த மானியங்களை வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதிஅநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.



