IMF உடனான இணக்கப்பாட்டை மாற்றி அமைக்க நேரிடும் என எச்சரிக்கை

மத்திய கிழக்கு போரானது தற்போது இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அது மேலும் தீவிரமடைந்து அடுத்த 3 மாதங்களுக்கும் மேல் நீடிக்கும் பட்சத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகளுக்கு முகம் கொடுக்கும் வகையில், அரசாங்கம் இப்போதிருந்தே புத்திசாலித்தனமாக முன்கூட்டியே தயாராக வேண்டும் என்று பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நிலவும் மத்தி கிழக்கு போர்ச் சூழல் காணமாக உலக அளவில் குறிப்பாக வலுசக்தித் துறையிலேயே அதிக தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவுகளை இலங்கைப் நுகர்வோரும் தாங்கிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
இதற்கு இரு வழிகள் உள்ளன. முதலாவது, உலக சந்தை விலைக்கு ஏற்ப உள்நாட்டு விலைகளிலும் ஏற்ற இறக்கங்களை அனுமதிப்பது. அவ்வாறு அனுமதித்தால், தற்போதைய உலக சந்தை நிலவரப்படி சமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெற்றோல் ஆகியவற்றின் விலைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இரண்டாவது வழி, அரசாங்கத்திடம் தற்போது மீதமுள்ள சுமார் 900 பில்லியன் ரூபாய் நிதியைக் கொண்டு எரிபொருள் அல்லது பிற முக்கிய வலுசக்தி ஆதாரங்களுக்கு ஏதேனும் மானியம் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு தீர்வுகளில் எதனைத் தேர்ந்தெடுத்தாலும் அதன் சாதக, பாதக விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.  மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலை காரணமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பண அனுப்புதல்கள் குறைய வாய்ப்புள்ளது.

இதனால் அந்நியச் செலாவணி கையிருப்பு குறையலாம். பெப்ரவரி மாதத்தில் மத்திய வங்கி தனது கையிருப்பை அதிகரிப்பதற்காக சந்தையிலிருந்து 400 மில்லியன் டொலர்களைப் பெற்றிருந்தது.
இதனால் சந்தையில் பணப்புழக்கம் அதிகரித்தது. ஆனால் மார்ச் மாதத்தில் டொலர் தட்டுப்பாடு காரணமாக அவ்வாறு பெரிய அளவில் கையிருப்பு சேர்க்கப்படவில்லை என்று பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்தப் போர் மூன்றாவது கட்டத்திற்குச் சென்று இன்னும் மூன்று மாதங்களுக்கும் மேல் நீடிக்கும் எனத் தெரிந்தால், நாணய நிதியத்துடனான தற்போதைய ஒப்பந்தத்தில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டி வரும்.