தேசிய அபிவிருந்தி வங்கியில் (National Development Bank PLC) பெரும் நட்டத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு உள்ளக மோசடி கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையை மத்திய வங்கியின் தொடர்பாடல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.
மோசடி குறித்து தேசிய அபிவிருந்தி வங்கி தெரிவித்துள்ளதாவது,
தேசிய அபிவிருந்தி வங்கியில் (National Development Bank PLC) அண்மையில் கண்டறியப்பட்ட உள்ளக மோசடி சம்பவத்தினால் சுமார் 13.2 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளமை மதிப்பிடப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக குறித்த வங்கி அறிவித்துள்ளது.
எனினும், வாடிக்கையாளர்களின் வைப்புக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும், வங்கியின் செயற்பாடுகள் வழமை போல் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் வங்கி நிர்வாகம் மேலும் உறுதியளித்துள்ளது.
வங்கி வெளியிட்டுள்ள கூட்டாண்மை வெளிப்படுத்தலின் (Corporate Disclosure) படி, இந்த மோசடியானது வங்கியின் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டுப் பிரிவுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து ஊழியர்களும் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் கணினி அணுகல் வசதிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
மோசடியுடன் தொடர்புடைய நபர்கள் சட்ட அமுலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பிரிவானது தற்போது விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அணுகல் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மோசடிக்கான காரணங்களைக் கண்டறியவும், உள்ளகக் கட்டுப்பாடுகளை மீளாய்வு செய்யவும் ஒரு சுயாதீன தடயவியல் கணக்காய்வாளரை (Forensic Auditor) நியமிக்க பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.
2026 மார்ச் 31 உடன் முடிவடைந்த காலாண்டில், இந்த மோசடிக்கான முழுமையான ஒதுக்கீடுகளைச் செய்த பின்னர், வங்கிக்கு சுமார் 4.0 பில்லியன் ரூபா வரிக்குப் பிந்திய நட்டம் ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் 31 நிலவரப்படி வங்கியின் மொத்த சொத்துத் தளமான 990 பில்லியன் ரூபாயில், இந்தச் சம்பவம் சுமார் 0.7 சதவீத தாக்கத்தையே ஏற்படுத்தும். இந்த பாதிப்பு இருந்தபோதிலும், வங்கியின் மூலதனப் போதுமை விகிதங்கள் (Tier I மற்றும் Total Capital Adequacy Ratios) மத்திய வங்கி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச அளவுகளுக்கு (முறையே 8.5% மற்றும் 12.5%) மேலதிகமாகவே காணப்படுகின்றன.
இலங்கை மத்திய வங்கி இந்த நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதுடன், வங்கியின் திரவத்தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தத் தேவையான ஆதரவை வழங்கி வருகிறது.



