ட்ரம்பின் ஈரானை அழிப்பேன் சூளுரைகளும் நெத்தன்யாகுவின் எல்லைவிரிவாக்க மனிதாயமற்ற ஆக்கிரமிப்புக்களும் அனைத்துலக அரசியல் முறைமையை மட்டுமல்ல அனைத்துலக போர்க்கால சட்டங்களையும் கூடச் சீரழித்து இறுதியில் ஐக்கியநாடுகள் சபை போருக்கு உதவாத சட்டங்களை இயற்றி வைத்துள்ளது என்று அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சரே கருத்துத் தெரிவிக்கும் அளவுக்கு எதனையும் மதியாது செயற்படும் போக்கை அமெரிக்கப் போக்காகவே வெளிப்படுத்தி ஈரானின் பாலத்தைத் தகர்த்ததின் மூலம் மக்களின் உட்கட்டுமானங்களை எல்லாம் நினைத்த மாதிரி தகர்த்தெறியும் அமெரிக்கப் போர்முறையை உலகு காண்கிறது.
ஈரானியர் கற்காலத்தவராக வாழ்கின்றனர், ஈரான் அழிக்கப்பட வேண்டியது. பிரான்சின் ஜனாதிபதியின் மனைவி தன்னை சரியாக நடத்தவில்லை என்றெல்லாம் ஒரு உலகத் தலைவருக்கு பொருத்தமற்ற வார்த்தைகளைக் கூட ட்ரம்ப் பொரிந்து தள்ளுகிறார். ஆனால் ஈரான் அமெரிக்காவின் இரண்டாவது எப் 15 போர்விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதன் மூலம் 1976 முதல் மகிப்பாது காப்பான போர் விமானம் என எப் 15க்கு இருந்து வந்த சந்தை மதிப்பையும் ஈரான் சரிய வைத்துள்ளது. அதே வேளை சீனா பாகிஸ்தானுடன் இணைந்து அமைதிக்கான திட்டங்களை முன்னெடுப்பதாகச் செய்திகள் வந்தாலும் அமெரிக்காவின் ஈரானுடனான இதுவரையான 35 நாள் போர்ச்செலவே 1.5 டிரில்லியன் டொலர் என பிபிசி தெரிவித்துள்ளமை எவ்வளவு தூரத்துக்கு போர் தொடருமோ என்ற ஏக்கத்தை உலகெங்கும் தோற்றுவித்துள்ளது.
இந்தப் போர் எவ்வளவுக்குச் சாதாரண மக்களைத் தாக்குகிறது என்பதற்கு வடையின் விலை 50வீதத்தால் உயர்வு என்ற தகவலே போதியதாகவுள்ளது. சாதாரண மக்களின் உணவுப் பற்றாக்குறை அதிக மாகிறதற்கான பலசான்றுகள் வெளியாகிக் கொண்டேயுள்ளன. இந்நிலையில் இலங்கையுடன் ரஸ்யா தனது பதில் வெளிவிவகார அமைச்சர் அன்ரே ருடெனையே அனுப்பி தேசிய மக்கள் சக்கி அரசாங்கத்துக்கு ரஸ்யா இலங்கைக்கு எரிபொருள் தட்டுப்பாடு வராதவாறு உதவும் என நம்பிக்கைக் கரம் கொடுத்துள்ள அதே வேளை ரஸ்யாவில் அனைத்துலகப் போக்குவரத்து மாநாட்டில் உரையாற்றிய சிறிலங்காவின் அமைச்சர் பிமல் ரத்தநாயக்கா “இலங்கைக்கும் ரஸ்யாவுக்குமிடையிலான கடற்பரப்புத் தூரம் அதிகமானாலும் விமானப் போக்குவரத்துத் துறையில் இருநாடுகளும் மிக நெருக்கமாகச் செயற்படுவதாகவும் ரஸ்யா தனது சிறிலங்காவுக் கான விமானச்சேவையை ஆண்டு முழுதும் இயக்க வேண்டுமெனவும் யூரேசியக் கட்டமைப்பில் சிறிலங்கா இணைந்து பயன்பெற ஆர்வமாகவுள்ளதாகவும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 8 முதல் 10 பில்லியன் டொலர்களை சிறிலங்கா போக்குவரத்துத் துறையில் முதலீடு செய்து இரு புதிய துறைமுகங்களையும் உருவாக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். கூடவே சிறிலங்கா எந்தவொரு வல்லரசு நாடுகளின் முகாங்களுக்கும் ஆதரவான நாடல்லவெனவும் புவிசார் அரசியலின் போர்க்களமாக மாறச் சிறிலங்கா விரும்பாதெனவும் மாறாக அனைத்து நாடுகளும் இணையும் சங்கமப்புள்ளியாகவே சிறிலங்கா இருக்கவிரும்புகிறது” எனவும் சிறிலங்காவின் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு தேசிய மக்கள் சக்தி தனக்கான அனைத்துலக நாடுகளின் ஆதரவைப்பலப்படுத்திக் கொள்ளும் இன்றைய சமகாலத்தில் ஈழத்தமிழர் மேலான இறைமை ஒடுக்கத்தையும் தேசிய ஒடுக்கத்தையும் முன்னைய சிறிலங்கா அரசாங்கங்கள் போலவே அவற்றை விட மிகநுட்பமான முறைகளில் தொடர்கிறது. மக்களுக்கு ஊழல் ஒழிப்பு போதையொழிப்பு போன்ற பொதுவிடயங்களில் தாங்கள் மாற்றங்களை கொண்டு வருவதை பெரிதுபடுத்தி அதே வேளை இவற்றைச் சீர்செய்த பின்னரே ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கு உரிய தீர்வென பேசிக்கொண்டு அதே நேரத்தில் புதிய அரசியலமைப்பின் மூலம் ஈழத்தமிழரை வடக்கு வாழ் கிழக்கு வாழ் சமுகங்கள் என வகைப்படுத்தி சமுகங்களின் நாளாந்த வாழ்க்கைப் பிரச்சினையாக ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினையை மாற்றிடக் கூடிய முறையில் வேகமாகச் செயற்பட்டு வருகின்றனர். இப்போக்குக்கு ஈழத்தமிழரால் சனநாயக முறைகளில் எதிர்வினையாற்றப்படாத நிலை தொடர்கிறது என்ற உண்மையை இலக்கு இவ்வாரத்தில் தாயக மற்றும் புலம்பதிந்த ஈழத்தமிழர்களுக்குக் கவனப்படுத்த விரும்புகிறது.
ஈழத்தமிழர்களின் தேசியப்பிரச்சினையை இதுதான் என தொடர்ந்து உலகிற்கு விளக்குவதில் ஈழத் தமிழர்கள் இன்று காட்டும் அலட்சியமே ஈழத்தமிழர்களின் இறைமை ஒடுக்கத்துக்கும் தேசிய ஒடுக்கத்துக்கும் எதிரான எதிர்வினையாற்றத் தடையாகவுள்ளது என்பது இலக்கின் கருத்து. உலக அரசியல் மொழியில் கூறுவ தானால் ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை என்பது பிரித்தானிய காலனித்துவத்தால் தீர்க்கப்படாத அனைத்துலக நாடுகளின் மன்றமான ஐக்கிய நாடுகள் சபையினால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாக 1948 முதல் இன்று வரை தொடர்கிறது என்பதாகவுள்ளது.
இந்த ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினைக்கு பிரித்தானியக் காலனித்துவ அரசு 1833இல் கோல்புறூக் கமரோன் அரசியல் சீர்திருத்தம் ஈழத்தமிழரின் யாழ்ப்பாண அரசின் இறைமையையும் மக்களையும் சிங்களவர்களின் கண்டி கோட்டே அரசுக்களின் இறைமைகளுடனும் கண்டிய மக்கள் கோட்டே மக்களுடனும் இணைத்து ஈழத்தமிழரின் விருப்பு எந்த வகையிலும் பெறப்படாது உருவாக்கிய சிலோன் என்னும் ஒற்றையாட்சி நாடும் அதன் சிலோன் அரசாங்கம் என்னும் அரசுமே மூலகாரணமாகவுள்ளது என்பது உலகு நன்கறிந்த வரலாறு. இதனால் 1833 முதல் இன்று வரை சட்டவாக்கத்தை சிங்கள மேலாதிக்கமில்லாது ஈழத்தமிழர்கள் சனநாயக பாராளமன்ற முறைமையில் செய்ய இயலாதவர்களாக 193 ஆண்டுகள் வாழ்கின்றனர் அவ்வாறே 1931இல் பிரித்தானியக் காலனித்துவம் கொண்டு வந்த டொனமூர் அரசியல் சீர்திருத்தம் முதல் இன்று வரை 95 ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் தமது தேச இனத்தவர் என்ற உண்மை உலகுக்கு மறைக்கப்பட்டவர்களாக சிறுபான்மையினம் என்ற பிரித்தானிய காலனித்துவ வகைப்படுத்தலில் தங்களுடைய யாழ்ப்பாண அரசினதும் வன்னியரசினதும் நிலப்பரப்புக்களான இலங்கையின் வடக்கு கிழக்கில் சிங்கள மேலாதிக்க நிர்வாகத்தின் கீழ் வாழ்பவர்களாக 95 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
அடுத்து ஏற்கனவே பிரித்தானியா சோல்பரி அரசியலமைப்பால் சிங்கள நவகாலனித்துவத்தை உருவாக்கிய 04.02.1948 முதல் 78 ஆண்டுகள் சிங்களப் பெரும்பான்மை ஒற்றை யாட்சிப் பாராளுமன்ற முறைமையுள் ஈழத்தமிழர்கள் தம்முடைய தன்னாட்சி உரிமையைப் பய்ன்படுத்தித் தங்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்க இயலாதவர்களாக காலனித்துவத்தால் தீர்க்கப்படாத பிரச்சினையை அனுபவித்து வருகின்றனர். அதே வேளை பிரித்தானிய பிரிவிக்கவுன்சில் சிலோன் அரசாங்கத்திறகு சிங்களமட்டும் சட்டத்தை மீளப்பெற்று சோல்பரி அரசியலமைப்புக்கு அமைய மீளவும் கொண்டு வருமாறும் வழக்குத் தொடுத்த சிலோன் அரசாங்கத்தின் சிங்களம் மட்டும் சட்டத்தால் வேலையிழந்த எழுதுவினைஞர் கோடீஸ்வரன் அவர்களுக்கு நட்ட ஈட்டுடன் மீளவும் வேலையைக் கொடுக்குமாறும் சோல்பரி அரசியலமைப்பின் 29(2) விதியின் கீழ் 1969 இல் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாது மாட்சிமைக்குரிய 2வது எலிசபேத் அரசியவர்கள் சிலோன் அரசின் தலைவர் என்ற சோல்பரி அரசியலமைப்பை வன்முறைப்படுத்தி, 1970 களில் சிறிமாவோ பண்டாரநாயக்காவை பிரதமராகக் கொண்டிருந்த சிங்கள அரசாங்கம் சிலோன் அரசாங்கத்தின் பாராளமன்றக் கட்டிடத்துக்கு வெளியே நவரங்கலா மண்டபத்தில் தன்னிச்சையாக சிறிலங்கா சிங்கள பௌத்த குடியரசை நிறுவும் அரசியலமைப்புச் சபையை அமைத்து 22.05. 1972 இல் அதனை பிரகனடப்படுத்தி சிலோன் என்னும் பெயரையும் சிறிலங்காவென மாற்றி பாராளுமன்றம் என்ற சொல்லையும் மாற்றி சிறிலங்கா தேசிய சபையை நிறுவினர்.
இதனால் அன்றைய ஈழத்தமிழர்களின் அரசியல் தலைவராக விளங்கிய சா.ஜே. வே. செல்வநாயகம் அவர்கள் அரசற்ற தேசஇனமாகிவிட்ட ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஈழத்தமிழர்கள் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தை முன்னெடுப்பரென உலகுக்கு அறிவித்துத் தனது காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டு விலகி அந்தத் தேர்தல் தொகுதியில் நடக்கும் மக்கள் வாக்களிப்பை ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமைப்பிரகடனத்துக்கான அடையாள குடியொப்பமாக அறிவித்து அத்தேர்தலை; சிறிலங்கா அரசாங்கம் காலதாமதமாக 1975 இல் நடத்திய பொழுது அதில் ஒன்பதினாயிரத்துக்கு அதிகமான வாக்குகளால் வெற்றி பெற்று சிறிலங்கா தேசிய சபையில் சத்தியம் செய்து உறுப்பினராக இணையாது அந்தத் சபையில் ஈழத்தமிழர்களின் தன்னாட்சிப் பிரகடனத்தை அறிவித்து சிறிலங்கா சிங்கள பௌத்த குடியரசில் இருந்து வெளியேறினார். 1976 இல் இந்த ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமைப்பிரகடனம் வட்டுக்கோட்டைத் தீர்மானமாக மே14இல் பண்ணாகமத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணி உலகிற்கு அறிவித்து.
1977 பொதுத்தேர்தலை வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான வடக்கு கிழக்கு தழுவிய குடியொப்பமாக அறிவித்து வெற்றியும் பெற்றனர். இவ்வாண்டு இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50 வது ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பொன்விழா ஆண்டாக 14.05. 2026இல் வருகிறது. இந்த உண்மையினை ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் இன்று உலகிற்கும் ஈழத்தமிழ் இளைய சமுதாயத்திற்கும் வெளிப்படையாக கூறி ஈழத்தமிழர்கள் பிரிவினை கோரவில்லை தங்களின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களின் வரலாற்றுத் தாயகத்தில் தங்களின் ஈழத்தமிழர் என்ற தேசியத்தின் அடிப்படையில் தங்களின் பாதுகாப்புடன் கூடிய அமைதியையும் வளர்ச்சிகளையும் கொண்ட அரசியல் எதிர்காலத்தைத் தங்களின் பிரிக்க இயலாத தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் நிர்ணயித்தல் என்பதே ஈழத்தமிழரின் தேசியப்பிரச்சினை என்பதை உறுதி செய்யத் தவறுகிறார்கள். இதுவே சிறிலங்காவின் இன்றைய அரசான தேசிய மக்கள் சக்தி இந்த ஈழத்தமிழரின் தேசியப்பிரச்சினையை வடக்கின் பிரச்சினை எனவும் கிழக்கின் பிரச்சினை எனவும் வகைப்படுத்திட வழிசெய்கிறது. எனவே வடக்கு கிழக்கின் நிலம் ஈழத்தமிழர்களுடையது என்பதை நிலைநாட்டுவதே ஈழத்தமிழரின் தேசியப்பிரச்சினை என்பதை தேசிய மக்கள் சக்திக்கு உணர்த்திட வேண்டும். இதனை உறுதிப்படுத்தக் கூடிய தீர்வே ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கான தீர்வென்பதையும் அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டும்.
இன்று உலகம் உள்ள நிலையில் ஈழத்தமிழர்கள் தங்களிடையிலும் உலக மக்கள் இடையிலும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தெளிவாக மீள் விளக்கமளிப்பதன் மூலமே ஈழத்தமிழரின் இறைமை ஒடுக்கத்தையும் தேசிய ஒடுக்கத்தையும் தடுத்து நிறுத்த முடியும் என்பதே இலக்கின் இவ்வாரக் கருத்தாகவுள்ளது.
ஆசிரியர்




