ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள், பெலாரஸ் போக்குவரத்து அமைச்சர் அலெக்ஸி லியாக்னோவிச்யை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்துத் துறை ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, இரு நாட்டு மக்களிடையேயான போக்குவரத்துத் தொடர்புகளை இலகுபடுத்தும் நோக்கில், புதிய விமான சேவை ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அத்துடன், பெலாரஸ் அரச போக்குவரத்து பல்கலைக்கழகத்தில் இலங்கைத் தொழில் வல்லுநர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் போக்குவரத்து நவீனமயமாக்கல் திட்டங்களுக்கு பெலாரஸின் நவீன தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தைப் பெற்றுக்கொள்வது குறித்தும் இந்தச் சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது



