இலங்கை எந்தவொரு வல்லரசு நாடுகளின் முகாமுக்கும் ஆதரவான நாடு அல்ல. புவிசார் அரசியலின் போர்க்களமாக மாற இலங்கை ஒருபோதும் விரும்பவில்லை. மாறாக, அனைத்து நாடுகளும் இணையும் ஒரு சங்கமப் புள்ளியாகவே இலங்கை இருக்க விரும்புகிறது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேசப் போக்குவரத்து மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், ‘வரலாறு முழுவதும் கிழக்கு மற்றும் மேற்கத்தேய நாடுகளை இணைக்கும் ஒரு மையப் புள்ளியாக இந்தியப் பெருங்கடலின் முத்து என அழைக்கப்படும் இலங்கை திகழ்ந்துள்ளது. பழங்கால கடல்சார் பட்டுப்பாதையிலும் இலங்கை முக்கியப் பங்காற்றியுள்ளது. எனினும், ஒரு நாடு போக்குவரத்து மையமாக உருவெடுக்க வெறும் புவியியல் இருப்பிடம் மட்டும் போதாது. மாறாக அரசியல், பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையே முதன்மையானது.’ என்று குறிப்பிட்டார்.
உலக அளவில் அமெரிக்க-ஈரான் போர் உள்ளிட்ட பதற்றமான மற்றும் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகின்ற போதிலும், இலங்கை ஒரு அமைதியான, ஸ்திரமான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது என அவர் மாநாட்டில் சுட்டிக்காட்டினார்.
இலங்கை எந்தவொரு வல்லரசு நாடுகளின் முகாமுக்கும் ஆதரவான நாடு அல்ல. புவிசார் அரசியலின் போர்க்களமாக மாற இலங்கை ஒருபோதும் விரும்பவில்லை. மாறாக, அனைத்து நாடுகளும் இணையும் ஒரு சங்கமப் புள்ளியாகவே இலங்கை இருக்க விரும்புகிறது. உலக நாடுகளின் இறையாண்மையை மதிக்கும் அனைத்து நட்பு நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற இலங்கை தயாராக உள்ளது’ என அமைச்சர் மேலும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நிலப்பரப்பு தூரம் அதிகமாக இருந்தாலும், விமானப் போக்குவரத்துத் துறையில் இரு நாடுகளும் மிக நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இலங்கை சுற்றுலாவுக்கு ரஷ்யாவில் பெரும் சாத்தியக்கூறுகள் இருப்பதால், ரஷ்யப் போக்குவரத்து அமைச்சு தனது விமானச் சேவைகளை ஆண்டு முழுவதும் தொடர்ந்து இயக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
யூரேசியக் கட்டமைப்பில் இலங்கையும் இணைந்து பயன்பெற ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இலங்கையின் அடுத்தகட்டப் பெரும் திட்டங்களையும் இதன் போது அறிவித்தார். அதற்கமைய நாட்டின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்த அடுத்த 3 ஆண்டுகளில் 8 முதல் 10 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளது. இலங்கையில் இரண்டு புதிய துறைமுகங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இலங்கையின் பிரதான சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றின் செயல்பாடுகளை நிர்வகிக்க சர்வதேசத் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த யூரேசிய போக்குவரத்து கட்டமைப்பின் மூலம் ரஷ்யா போன்ற பெரிய நாடுகள் மட்டுமன்றி, இலங்கை போன்ற வளரும் தீவு நாடுகளும் பெரும் நன்மையடையும் என நம்புவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



