இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான 11வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை (02) கொழும்பில் உள்ள வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை மீளாய்வு செய்ததுடன், எதிர்காலத்தில் அந்த உறவுகளை வலுப்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
சுற்றுலா, கல்வி, பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், விளையாட்டு மற்றும் கலாச்சார ரீதியான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
ரஷ்ய அரசாங்கத்துடன் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக, எரிசக்தி மற்றும் பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் உரம் வழங்கல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான ஒரு புதிய இலக்கை நிர்ணயிக்கவும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஈடுபாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். அத்துடன், ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றும் இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் தொடர்பான விடயங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 2027ஆம் ஆண்டுடன் 70 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு, உயர்மட்டத் தலைவர்களின் விஜயங்கள் உள்ளிட்ட பல்வேறு விசேட நிகழ்வுகளை உரிய முறையில் முன்னெடுக்க இரு தரப்பும் தீர்மானித்துள்ளன.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு இலங்கை தரப்பில் வெளிநாட்டு விவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜாவும், ரஷ்ய தரப்பில் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோவும் தலைமை தாங்கினர். அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.



