மாறிவரும் உலக அரசியல்: இலங்கை புதிய மையமாக மாறுமா? – காதர் மாஸ்டர் 

அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலி மற்றும் இலக்கு மின்னிதழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய ‘தாயக களம்’ நிகழ்வில் மதிப்புக்குரிய ஆய்வாளர் காதர் மாஸ்டர் அவர்கள் கலந்துகொண்டு, தற்போதைய மத்திய கிழக்கு போர்ச் சூழல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய மாற்றங்கள் இலங்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விரிவாகப் பேசுகிறார்.
கேள்வி :
தற்போதைய மத்திய கிழக்கு போர்ச் சூழல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நடைபெறும் மாற்றங்கள், நமது தாயகமான இலங்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? ஈரான் ஏவிய ஏவுகணைகள் அமெரிக்காவின் டீகோ கார்சியா தளம் வரை எட்டக்கூடும் என்ற நிலையில், இலங்கை உலக அரசியலின் மையப் புள்ளியாக மாறுமா?
பதில் :
இலங்கை இன்று தனது விருப்பத்திற்கு அப்பாற் பட்டு ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் சூழலில் சிக்கியுள்ளது. இலங்கையின் பூகோள முக்கியத்துவத்தை விளக்க இரண்டாம் உலகப் போரை உதாரணமாகக் கொள்ளலாம். 1942 ஈஸ்டர் திருநாளின் போது ஜப்பானியர்கள் கொழும்பு மற்றும் திருகோணமலை மீது குண்டுவீசி பிரித்தானிய கடற்படையைத் தகர்த்தனர். அப்போது இலங்கை வீழ்ந்தால் முழு ஆசியாவையும் இழக்க நேரிடும் என்ற நிலை இருந்தது. அதனால் தான் பிரித்தானியா தனது தலைமையகத்தைக் கண்டிக்கு மாற்றி, மிக முக்கியமான தளபதியான மவுண்ட் பேட்டனை அனுப்பி இலங்கையைப் பாதுகாத்தது. இன்றும் உலகின் மிக முக்கியமான கடல் வழிகளான ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் மலாக்கா கால்வாய் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட ஒரு ‘வாசல் படியாக’ இலங்கை திகழ்கிறது. ஆப்பிரிக்கா அல்லது அமெரிக்காவிலிருந்து ஆசிய நாடுகளுக்குச் செல்லும் கப்பல்கள் இலங்கையைக் கடந்தே செல்ல வேண்டும். உலகக் கப்பல் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதத்திற்கும் அதிகமானவை இலங்கைக்கு மிக அருகாமையில் பயணிக்கின்றன. திருகோணமலை உலகின் மிகச்சிறந்த இயற்கை துறைமுகமாக இருப்பதால், போர்ச் சூழலில் எந்தவொரு பெரிய கப்பலும் அங்கு பாதுகாப்பாகத் தரிக்க முடியும். இத்தகைய கேந்திர முக்கியத்துவத்தால் இன்று இலங்கையின் ‘முத்துவின் விலை’ அதாவது அதன் மதிப்பு சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.
கேள்வி :
இலங்கையில் உள்ள துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் இன்று சர்வதேச சக்திகளால் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன? குறிப்பாக அமெரிக் காவுடனான ஒப்பந்தங்கள் இலங்கையின் இறையாண் மையைப் பாதிக்கின்றனவா?
பதில் :
ஹம்பாந்தோட்டை, மத்தல மற்றும் கொழும்பு துறைமுக நகரம் என ஏற்கெனவே கட்டமைப்புகள் தயாராக இருப்பதால் இலங்கையின் மதிப்பு கூடியுள்ளது. அண்மையில் ஈரானிய கப்பல் ஒன்று காலியிலிருந்து 40 கடல் மைல் தொலைவில் அமெரிக்காவால் தாக்கப்பட்ட சம்பவத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இலங்கையின் கடல் எல்லைக்குள் இத்தாக்குதல் நடந்தும், அரசால் அதைக் கண்டிக்க முடியாமல் போனதற்குக் காரணம் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலங்களில் அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட எக்சா (ACSA) போன்ற ஒப்பந்தங்களே ஆகும். இந்த ஒப் பந்தத்தின்படி அமெரிக்கா இலங்கையின் எந்தவொரு துறைமுகத்தையோ அல்லது விமான தளத்தையோ பயன்படுத்தலாம்; அவர்களின் தளவாடங்களைச் சோத னையிடக் கூட இலங்கைக்கு அதிகாரம் இல்லை. இத னால் இலங்கையின் இறையாண்மை மீறப்பட்டாலும் ஒப் பந்தம் இருப்பதாலேயே சர்வதேச அளவில் முறையிட முடியாத சூழல் உள்ளது. இருப்பினும், தற்போதைய அரசு இத்தகைய ஒப்பந்தங்களை ரத்து செய்யவோ அல்லது மாற்றியமைக்கவோ இந்தியா மற்றும் சீனாவின் அழுத்தங் களுக்கு மத்தியில் ஒரு மென்போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.
கேள்வி :
இலங்கை ஒரு சர்வதேசப் பொருளாதார மையமாகவோ அல்லது ‘ஹப்பாக’ (Hub) மாறுவதற்குத் தற்போதைய சூழலில் வாய்ப்பு உள்ளதா? 
பதில் :
நிச்சயமாக. ஜிபூட்டி மற்றும் துபாய் போன்ற நாடுகள் தங்களின் புவியியல் அமைப்பை வைத்துச் சர்வதேச வருமானத்தை ஈட்டுவது போல இலங்கையாலும் முடியும். இலங்கையில் போர்ட் சிட்டி, மத்தல விமான நிலையம் மற்றும் திருகோணமலை எண்ணெய் குதங்கள் என அனைத்தும் தயாராக உள்ளன. சர்வதேச வங்கிகள் மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் ஒரு மையமாக (Hub) இலங்கையை மாற்ற முடியும். ஆனால், இலங்கையின் சாபக்கேடு என்னவென்றால், சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே நிலவி வரும் ‘இனவாத அரசியல்’ தான். சிங்கப்பூருக்கு இணையாக வளர வேண்டிய நாடு, அதிகாரத்தைத் தக்கவைக்க முன்னெடுக்கப்பட்ட இனவாதக் கொள்கைகளால் பின்னோக்கிச் சென்றது. ஈழத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்த்து, முறையான பொருளாதாரத் திட்டங்களை வகுத்தால் மட்டுமே இலங்கை ஆசியாவின் உயர்ந்த நாடாக மாற முடியும். தற்போதைய சர்வதேசச் சூழல் இலங்கைக்கு ஒரு பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளது; அதை இனவாதத்தைக் கடந்து சரியாகப் பயன்படுத்தினால் இலங்கை உலக அரசியலின் பொருளாதார மையமாக நிச்சயம் மாறும்.
கேள்வி :
அரசியல் ரீதியாக இச்சட்டம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? குறிப்பாகத் தென்னிலங்கை மற்றும் வடகிழக்கு மக்களின் நிலைப்பாடு என்ன?
பதில் :
இச்சட்டம் உண்மையில் ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் கருவியாகும். ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்தவொரு அமைப் பையும் ‘பயங்கரவாத அமைப்பு’ என்று தடை செய்ய முடியும். அவ்வாறு தடை செய்யப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லவும் இச்சட்டம் இடமளிக்கவில்லை.
தென்னிலங்கையில் எதிர்க்கட்சிகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்புகின்றன. ஆனால், அவர்கள் முன்பு ஆட்சியில் இருந்த போது PTA சட்டத்தை மிக மோசமாகப் பயன்படுத்தியவர்களே. தற்போதைய அரசியல் சூழலில் தமது பாதுகாப்பிற்காக அவர்கள் இச்சட்டத்தை எதிர்க்கக் கூடும். வடகிழக்கில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் தலைமைகள் இதற்கு எதிராகப் பல விழிப்புணர்வுப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. சர்வதேச அளவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை (UNHRC) இச் சட்டம் குறித்து ஜனாதிபதிக்கு 20 பக்கங்கள் கொண்ட விரி வான கண்டனக் கடிதத்தை அனுப்பியுள்ளது.