இந்தியாவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் வரி சீர்திருத்த முறையை இலங்கையும் ஒரு முன்மாதிரியாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிரடியாக உயரும் போது, சந்தையை நிலைப்படுத்தவும் மேலதிக விலையேற்றத்தைத் தடுக்கவும் இந்தியா தனது உற்பத்தி வரியைக் குறைத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதி ஒழுக்கத்தைப் பேணுவது முக்கியம் என்றாலும், இந்தியாவின் வளர்ச்சியை மையமாகக் கொண்ட அணுகுமுறையைப் பின்பற்றி அதிகப்படியான வரிச் சுமைகளைக் குறைப்பது, முதலீடுகளை ஊக்குவிக்கவும் மக்களுக்கு நிம்மதியளிக்கவும் உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இலங்கைக்கு தற்போது கிடைத்துள்ள 38,000 டன் எரிபொருள் விநியோகத்திற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் அவர் பாராட்டியுள்ளார்.
இலங்கை நெருக்கடியில் இருந்த போதெல்லாம் இந்தியா முதன்முதலாக உதவிக்கரம் நீட்டியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் முதல் பொருளாதார உதவிகள் வரை இந்தியா தொடர்ந்து வழங்கி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், பிராந்தியத்தின் மேன்மைக்காக நாடுகள் ஒன்றிணைந்து மூலோபாயப் பங்காளிகளாகச் செயல்படுவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.



