யாழ்ப்பாணம் – மணல்காடு பகுதிக்குச் சுற்றுலா சென்றவர்கள் மீது, மதுபோதையில் இருந்த சிவில் உடை தரித்த காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், மேலாடைகள் இன்றித் திணைக்கள வாகனத்தைப் பயன்படுத்தி இந்த வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்து மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மூவரிடம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலக அதிகாரிகள் நேரில் சென்று வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யவும், சட்டத்திற்குப் புறம்பாக நடந்துகொண்ட அதிகாரிகள் மீது உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கவும் முறையான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரின் இந்த அத்துமீறல் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் தற்போது தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றது.



