மத்திய கிழக்கில் போர் பதற்றம்: சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலைக்கு கேள்வி அதிகரிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும் இலங்கைத் தேயிலைக்கான (Ceylon Tea) கேள்வி சர்வதேச சந்தையில் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கைத் தேயிலை சபை தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழலால், அங்கிருக்கும் மக்கள் உணவுப் பொருட்களைச் சேமிக்கத் தொடங்கியுள்ளனர். இது தேயிலைக்கான கேள்வியை அதிகரிக்கச் செய்துள்ளதாக தேயிலை சபையின் தலைவர் ராஜ் ஒபேசேகர தெரிவித்தார்.

கடந்த வார ஏலத்தில் ஒரு கிலோ தேயிலையின் சராசரி விற்பனை விலை 1,153 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

ஆரம்பத்தில் தேயிலை விலையில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும், தற்போது விலையும் தேயிலைக்கான கேள்வியும் ஸ்திரமான நிலையை எட்டியுள்ளன. தற்போது ஏலத்தில் விற்பனையாகாத தேயிலையின் அளவு 8% முதல் 10% வரை மாத்திரமே காணப்படுகிறது.

ஹார்முஸ் நீரிணைப்பு (Strait of Hormuz) மூடப்பட்டமை மற்றும் பிராந்திய மோதல்கள் காரணமாக குவைத், சவுதி அரேபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கான ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.

எனினும், தேயிலை சபை எடுத்துள்ள துரித நடவடிக்கையினால் துருக்கி மற்றும் ஈராக் போன்ற நாடுகளுக்கு மாற்று கடல் வழித்தடங்கள் ஊடாக ஏற்றுமதி வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேயிலை உற்பத்தியைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக அரசாங்கம் சில முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது:

தேயிலை விவசாயிகளுக்குத் தேவையான மூன்று மாத காலத்திற்கான உரத்தை விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேயிலை தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்குத் தேவையான எரிபொருளைத் தொடர்ச்சியாக வழங்குவதை உறுதிப்படுத்த விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் மூலம் மத்திய கிழக்கு நெருக்கடியால் இலங்கைத் தேயிலை சந்தைக்கு ஏற்படவிருந்த பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து வருவதாகத் தேயிலை சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.