மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே மூண்டுள்ள போர் மேகங்கள், தற்போது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை பதற்றமான போர்க்களமாக மாற்றியிருக்கின்றன.
குறிப்பாக, இலங்கையின் கடல் எல்லைக்கு மிக அருகாமையில் ஈரானியப் போர்க்கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம், சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் தான் ஒரு ‘நடுநிலை’ நாடாகச் செயற்படுவதாகக் கூறிக்கொண்டா லும், கள யதார்த்தங்கள் அமெரிக்காவின் பலமான அழுத் தங்களுக்கு இலங்கை அடிபணிந்து போயுள்ளதையே அப் பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
வெளிவிவகார அமைச்சு இதனை மறுத்தா லும், ஈரானிய மாலுமிகள் இலங்கையில் தடுத்து வைக் கப்பட்டுள்ள விதமும், அமெரிக்கத் தூதுவர்களின் தொடர்ச் சியான விஜயங்களும் இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள மர்மங்களை உறுதிப்படுத்துகின்றன.
கடந்த மார்ச் 4ஆம் திகதி காலிக் கடற்பரப்புக்கு அப்பால் 19 கடல் மைல் தொலைவில் ஈரானின் ‘ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா’ போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட போது, இலங்கை ஒரு இறையாண்மையுள்ள நாடு என்பதை விடவும், கண் கட்டப்பட்ட சாட்சியாகவே இருந்தது.
இலங்கைக்குத் தெரியாமலேயே அதன் எல்லைக்கு மிக அருகில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலொன்று உலவி, ஒரு திட்டமிட்ட தாக்குதலை நடத்தியிருப்பது சர்வதேச போரியல் வல்லுனர்களிடையே பாரிய கேள்விகளை எழுப் பியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை போன்ற பிராந்திய நாடுகளின் பாதுகாப்பையும் நட்புறவையும் துச்சமாக மதித்து, அமெரிக்கா தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவு, இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு எந்தளவுக்கு பலவீன மாக உள்ளது என்பதை உணர்த்துகிறது.
இந்தச் சம்பவத்தின் நீட்சியாக, ஈரானிய மாலுமி கள் மற்றும் விநியோகக் கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.எஸ்.புஷேர்’ தொடர்பான விவகாரத்தில் நீடிக்கும் இழுபறிகள் இலங்கையின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கேள்விக்குள்ளாக்குகின்றன.
மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்து மீட்கப்பட்ட மாலுமிகளும், விநியோகக் கப்பலில் இருந்த 208பேரும் தற்போது வெலிசரை கடற்படைத் தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களை ‘தங்க வைக்கப் பட்டுள்ளனர்’ என்பதை விட, ‘தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்’ என்பதே பொருத்தமானதாக இருக்கும்.
இவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படாமல் குறிப்பிட்ட எல்லைக்குள் முடக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில், இந்தியாவில் இதேபோன்ற சூழலில் புகலி டம் தேடிய ஈரானின் மூன்றாவது கப்பலும் 130பேரும் இந்திய அரசாங்கம் உடனடியாக ஈரானுக்குத் திருப்பி அனுப்பிவிட்டது. ஆனால், இலங்கை மாத்திரம் அவர்களைத் திருப்பி அனுப்புவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறது. ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தைகளில், சர்வ தேச சட்டங்களுக்கு அமைவாகவே செயற்படுவதாகக் கூறினா லும், உயிருடன் உள்ள மாலுமிகளை உடனடியாக அனுப்ப முடியாது என்ற பிடிவாதம் அமெரிக்காவின் திருப்திக்காகவே எடுக்கப்பட்ட முடிவாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா எப்போது ‘பச்சைக்கொடி’ காட்டுகிறதோ, அப்போதுதான் இந்த மாலுமிகள் விடுவிக்கப்படுவார்கள் என்ற நிலையே இன்று காணப்படுகிறது. விநியோகக் கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேர்’ கப்பலை திருகோணமலைத் துறைமுகத்திற்கு இழுத்துச் செல்வதில் நிலவும் தாமதங்களும் சந்தேகங்களை வலுப் படுத்துகின்றன.
5000 தொன் எடை கொண்ட இந்தக் கப்பலில் 2000 தொன் எரிபொருள் உள்ள நிலையில், அதனை இழுத் துச் செல்வதற்கான போதிய வசதிகள் இலங்கை கடற் படையிடம் இல்லை. இதற்காக 2 இலட்சம் டொலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு, அந்தச் செலவை ஏற்க ஈரான் முன்வந்தும் கூட, பணிகள் மந்தகதியிலேயே உள்ளன.
உண்மையில், இந்தக் கப்பலை கொழும்புத் துறை முகத்திற்குள் கொண்டு வர அரசாங்கம் அஞ்சியதற்கு முக்கிய காரணம், அமெரிக்கா அல்லது இஸ்ரேல் இந்தக் கப்பலையும் இலக்கு வைக்கக்கூடும் என்பதாலாகும். தனது நாட்டின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் ஒரு வெளிநாட்டுக் கப்பலுக்குப் பாதுகாப்பளிக்க முடியாத அளவுக்கு இலங்கை பலவீனமடைந்துள்ளது அல்லது அமெரிக்காவின் தாக்குதல் அச்சத்திற்கு அடிபணிந்துள்ளது என்பது தெளிவாகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, அமெரிக்கப் போர் விமானங்கள் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கக் கோரிய அனுமதியை தாம் நிராகரித்ததாகவும் ஈரானின் மூன்று கப்பல்கள் பிரவேசிப் பதற்கான அனுமதியை ஆராய்ந்து வந்ததாகவும் குறிப்பிட்டு, ‘நடுநிலையை’ நிரூபிக்க முயன்றார்.
அநுரவின் கருத்தின் பிரகாரம், ஈரான் கப்பல் விடயத்தில் மூன்று கப்பல்கள் மார்ச் மாதம் 9-13ஆம் திகதிகளில் கொழும்புத்துறைமுகத்துக்கு நல்லெண்ண விஜயத்தை மேற்கொள்ள பெப்ரவரி 26ஆம் திகதி கோரிக்கை விடுக்கப்பட்டது. அது தொடர்பில் இலங்கை ஆராய்ந்து வந்த நிலையில், பெப்ரவரி26ஆம் திகதி மாலை ஐக்கிய அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு தாக்குதல் விமானங்கள் எட்டு ஏவுகணைகளுடன் மத்தள விமான நிலையத்தில் அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரானின் மூன்று கப்பல்களின் நல்லெண்ண விஜயக்கோரிக்கை ஒரு தற்காப்பு முயற்சியாக இருந்தாலும் எட்டு ஏவுகணைகள் பொருத்தப்பட்ட அமெரிக்க விமானங் கள் இலங்கையைப் பயன்படுத்த அனுமதி கோரியதே, அமெரிக்கா இலங்கையைத் தனது ஒரு போர் முகாமாக மாற்ற முயல்வதைக் காட்டுகிறது.
அதேவேளை, அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான சிறப்புத் தூதுவரும் இந்தியாவுக் கான அமெரிக்க தூதுவருமான செர்ஜியோ கோர் தற்போது இலங்கைக்கு ‘நல்லெண்ண’ விஜயத்தை மேற் கொண்டுள் ளார். அவர் ஜனாதிபதி அநுரவுடன் நடத்திய சந்திப்பின் மறுநாள் தான் அமெரிக்க விமானங்கள் தரையிறங்கும் அனுமதி விவகாரத்தினை அநுர வெளிப்படுத்தியுள்ளார்.
அநுர குறித்த விடயத்தினை வெளிப்படுத்திக் கொண்டிருக் கையில் அமெரிக்க விசேட பிரதிநிதி கோர் இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினருடன் மூடிய அறைக் குள் பேச்சுக்களை நடத்திக்கொண்டிருந்ததோடு அதன் முடிவில் ‘எஸ்.எல்.என்.எஸ். கஜபாகு’ கப்பலில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.
இந்தச் செயற்பாடுகள் இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எடுக்கும் முயற்சிகளின் பகுதிகளாகும். குறிப்பாக, தெற்காசியாவிற்கான டொனால்ட் ட்ரம்ப்பின் பிரதிநிதியாகக் கருதப்படும் செர்ஜியோ கோரின் வருகை, இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநாட்ட இலங்கையை பகடைக்காயாகப் பயன்படுத்து வதையே உறுதிப்படுத்துகிறது.
இதேவேளை, எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களு மின்றி, அமெரிக்காவின் வெள்ளைமாளிகை புலனாய்வுத் துறைக்கு பொறுப்பான மைக்கல் ஜெரீனா இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு திரும்பியிருக்கிறார்.
இவரது விஜயம் சம்பந்தமாக எந்தவிதமான தகவல்க ளும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் அவர் ஜனாதிபதி அநுர உள்ளிட்ட உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிக ளைச் சந்தித்துள்ளார் என்பது மட்டும் தற்போதைக்கு உறுதி யான விடயம். இலங்கை அரசாங்கம் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் கோரிக்கைகளுக்கு மறைமுகமாக இணங்கிச் செல்கிறது. இது ஜே.ஆர். ஜயவர்தன காலத்தில் காணப்பட்டதைப் போன்றதொரு மேற்கத்தேயச் சார்பு நிலையையே மீண்டும் நினைவுபடுத்துகிறது.
இலங்கை மீண்டும் ஒருமுறை வல்லரசுகளின் பனிப்போருக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் ஈரானுடனான எரிபொருள் மற்றும் இராஜதந்திர உறவுகள், மறுபுறம் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் நிதி அழுத்தங்களென இலங்கை இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கிறது. மாலுமிகளை விடுவிக்காமல் இழுத்தடிப்பது, கப்பலை நகர்த்தத் தயங்குவது மற்றும் அமெரிக்கத் தூதுவர் களின் தொடர்ச்சியான வருகைகள் என்பன இலங்கையின் ‘அணிசேராக் கொள்கை’ என்பது வெறும் காகிதத்தோடு முடிந்துவிட்டது என்பதை நிரூபிக்கின்றன.
அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறினாலும், கடற்பரப்பில் அமெரிக்காவின் அத்துமீறல்களைத் தடுக்கவோ அல்லது கேள்வி கேட்கவோ முடியாத நிலையில் அரசாங்கம் இருப்பதே கசப்பான உண்மையாகும்.
இறுதியில், அமெரிக்கா விரித்துள்ள இந்த இந்தோ-பசுபிக் வலையில் இலங்கை மிக மோசமாகச் சிக்கியுள்ளது. இந்தச் சிக்கலில் இருந்து விடுபடத் தேவையான துணிச்சலான இராஜதந்திரம் தற்போதைய ஆட்சியாளர்களிடம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே. ஈரானிய கடற்படையினரின் கண்ணீரும், நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களும் இலங்கையின் இறையாண் மையின் மீது விழுந்த பெரும் வடுக்களாகவே வரலாற்றில் நிலைத்திருக்கும்.
இவ்வாறான நிலையில், சர்வதேச ரீதியில் ஒரு கௌரவமான இடத்தைப் பிடிப்பதற்குப் பதிலாக, வல்லரசு களின் தேவைகளுக்காகத் தனது கொள்கைகளை வளைத் துக் கொடுக்கும் ஒரு நாடாக இலங்கை மாறிவருவது கவ லைக்குரிய விடயமாகும்.
அமெரிக்க அழுத்தங்களுக்குப் பணிந்து ஈரானியர் களைத் தடுத்து வைத்திருப்பது, எதிர்காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளுடனான இலங்கையின் உறவில் பாரிய விரிசல்களை ஏற்படுத்தக்கூடும்.
அமெரிக்கா வழங்கும் கடல்சார் பாதுகாப்பு என்பது உண்மையில் இலங்கையைப் பாதுகாப்பதற்கா அல்லது அமெரிக்காவின் பிராந்திய நலன்களைப் பாதுகாப்பதற்கா என்பதை அரசாங்கம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
வெளிப்படையாக நடுநிலை என்று கூறிக்கொண்டு, திரைக்குப் பின்னால் அமெரிக்காவின் விருப்பங்களுக்கு ஏற்பச் செயற்படுவது இலங்கையை மீண்டுமொரு சர்வதேச நெருக்கடிக்குள் தள்ளிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த நிலையில் தான் தனியார் தொலைக்காட்சி க்கு செவ்வியொன்றை வழங்கியுள்ள டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார் மத்திய கிழக்கு போரில் இலங்கை யாருடன் நட்பு பாராட்ட வேண்டுமென்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டு மென்று வலியுறுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.



