இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதாகக் கூறி, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் விசேட எச்சரிக்கைச் செய்தி முற்றிலும் உண்மையானதல்ல எனவும், அது ஒரு போலியான பதிவாகும் எனவும் பொலிஸ் தலைமையகம் இன்று திங்கட்கிழமை (23) உத்தியோகபூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
“நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்” எனப் பொருள்படும் வகையில், பொலிஸாரின் பெயரில் ஒரு செய்தி வட்ஸ்அப் மற்றும் முகநூல் வாயிலாகப் பரப்பப்பட்டு வருகின்றது.
“விழிப்புடன் இருங்கள். நமது நாட்டின் இந்த இக்கட்டான பொருளாதாரச் சூழலில் நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய மற்றும் நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விடயங்கள் தொடர்பில் உங்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று செய்தி பகிரப்படுகின்றது.
இது குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்,
குறித்த செய்தியானது பொலிஸ் திணைக்களத்தின் எந்தவொரு உத்தியோகபூர்வத் தொடர்பாடல் கட்டமைப்பின் ஊடாகவும் வெளியிடப்படவில்லை.
பொலிஸாரினால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் ‘பொலிஸ் ஊடகப் பிரிவு’ மூலமாகவே உத்தியோகபூர்வத் தலைப்புகளின் கீழ் ஊடகங்களுக்கு வழங்கப்படும்.
இந்தத் தவறான தகவலை திட்டமிட்டுப் பரப்பிய தனிநபர்கள் அல்லது குழுக்களைக் கண்டறியும் நோக்கில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகளைச் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் எனவும், பொலிஸாரின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் மற்றும் யூடியூப் தளங்களில் வெளியாகும் தகவல்களை மாத்திரம் நம்புமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.



