வியட்நாம் தூதுவர் – ரில்வின் சில்வா சந்திப்பு

வியட்நாம் தூதுவர் திரிந் தி தம் (Trinh Thi Tam) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை (18) பெலவத்தையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கடந்த ஜனவரி 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெற்ற வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மக்கள் விடுதலை முன்னணிக்கு தெளிவுபடுத்துவதே இச்சந்திப்பின் நோக்கமாக அமைந்திருந்தது.

இதன்போது, 14வது தேசிய மாநாட்டின் சிறப்பம்சங்கள் மற்றும் முக்கியத்துவத்தை தூதுவர் திரிந் தி தம் விளக்கினார். வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி 2026 முதல் 2030ஆம் ஆண்டு வரையிலான இலக்குகளை நிர்ணயித்துள்ளதாகவும், 2035 மற்றும் 2045ஆம் ஆண்டுகளுக்கான நீண்டகால இலக்குகளை நோக்கி நாட்டை வழிநடத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தற்போதைய மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் வியட்நாமும் இலங்கையும் இந்த சவால்களை எதிர்கொள்ளும் விதம் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இதன்போது, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட டு லாம் (To Lam)  மற்றும் மத்திய குழுவினருக்கு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்தநிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, சட்டத்தரணி ஜானக அதிகாரிகே, சட்டத்தரணி கல்பனா மதுபாஷினி ஆகியோரும், வியட்நாம் தூதரகத்தின் பிரதித் தூதுவர் லே வான் ஹவாங் (Le Van Huong) உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.