இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தனது தனிப்பட்ட கர்வத்தையும் பிடிவாதத்தையும் கைவிட்டு, அனுபவம் வாய்ந்த அனைத்து அரசியல் தரப்புகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி மாநாட்டை உடனடியாகக் கூட்டவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், எரிபொருள் விநியோகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு நடைமுறை தொடர்பில் அரசாங்கத் தரப்பினர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
ஆரம்பத்தில் இத்தகைய ஒரு முறையின் அவசியம் இல்லை என்றும், நாட்டில் போதிய எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்றும் கூறிவந்த அரசாங்கம், நிலைமை கையை மீறி மோசமடைந்த பின்னரே அதே முறையை அமுல்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது இந்த நடைமுறையில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்க்க வேண்டுமானால், முந்தைய ஆட்சிக்காலங்களில் இத்தகைய திட்டங்களை முன்னெடுத்த நிபுணர்களின் ஆலோசனைகளையும் உதவியையும் அரசாங்கம் திறந்த மனதுடன் நாட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.



