ஈரான் போர் இலங்கையை பெரிதும் பாதிக்கும் : ஈரானுக்குக்கான முன்னாள் தூதுவர் கருத்து

ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இந்தியாவிடமிருந்து தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று இலங்கை அரசாங்கம் நம்புவதாக ஈரானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் N.M.சஹீட் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றில் கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் 14-வது நாளை எட்டியுள்ள நிலையில், உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக இலங்கையில் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் ஒரு கொள்கலன் மசகு எண்ணெய் விலை 120 டொலரை நெருங்கியுள்ள நிலையில், இலங்கையில் எரிபொருள் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன.  அமெரிக்கத் தளங்களைக் கொண்டுள்ள ஓமான், சவுதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகள் தமது வான்பரப்பை ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்குப் பயன்படுத்த அனுமதித்தால், அந்தத் தளங்கள் அழிக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, சவுதி மற்றும் கத்தார் போன்ற நாடுகள் தமது வான்பரப்பை அமெரிக்கா பயன்படுத்த உத்தியோகபூர்வமாகத் தடை விதித்துள்ளன. இது ஈரானுக்குக் கிடைத்த ஒரு முக்கிய இராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்படுவதாக ஈரானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் N.M.சஹீட் தெரிவித்துள்ளார்.

தற்போதைய இக்கட்டான சூழலில், ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்களைச் செலுத்த இந்தியாவுக்கு மட்டும் ஈரான் விசேட அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுடனான இந்த இணக்கப்பாடு காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இந்தியாவிடமிருந்து தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை அரசாங்கம் நம்புவதாகவும் ஈரானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் N.M.சஹீட் தெரிவித்துள்ளார்.