அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அதற்காக அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினராகிய தங்களது தரப்பு முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அடுத்த சில மாதங்களில் சாதகமான முடிவுகளை எம்மால் வழங்க முடியும்.
அதற்காக அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை எமக்குள்ளது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கொண்டுள்ளது.
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று உறுதியாக நம்புகிறோம் என்று ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்கம் இலங்கை முழுவதும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்தே தங்களது தரப்புஅதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, தற்போதைய ஆட்சியில் நிலவும் ஊழல்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல செயல்பாடுகளுடன் ஒருபோதும் உடன்படப் போவதில்லை. எனவே எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு பொதுத் தளத்தை உருவாக்க முயற்சி இடம்பெறுகிறது.
எதிர்க்கட்சியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு அடையாளங்கள் உள்ளன, அவை குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியினர் வலுவான போராட்டங்களை முன்னெடுப்பதில்லை என்ற எண்ணம் உள்ளது.
“தேசிய பாதுகாப்பு மற்றும் தற்போதைய சூழல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் மிகத் தெளிவான அறிக்கையை வழங்கியுள்ளார். அதுவே தங்களது கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாகும். ஜனாதிபதி தற்போது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கருத்துக்களைக் கூறி வருகிறார்.
ஆனால் எமக்கு ஒரு நிலையான கொள்கை உண்டு” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.



