அடக்குமுறைக்காக அவசரகால சட்டம் பயன்படுத்தப்படவில்லை…

அவசரகாலச் சட்டத்தை அடக்குமுறைக்காக பயன்படுத்தும் எந்தவொரு தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது. இதனை கடந்த மூன்று மாதங்களாக செயலில் நிரூபித்தோம் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (06) உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

அவசரகாலச் சட்டத்தை நாம் அடக்குமுறைக்காககப் பயன்படுத்த வில்லை. கடந்த மூன்று மாதங்களாக அச்சட்டம் அமுலில் இருக்கின்றது. இக்காலப்பகுதிக்குள் மேற்படி சட்டம் அடக்குமுறைக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதற்குரிய ஆதாரத்தை எதிரணியால் முன்வைக்க முடியுமா? எனவும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.

சமூகவலைத்தளங்களில் அரசாங்கத்துக்கு எதிராக எவ்வளவு போலி தகவல்கள் பரப்படுகின்றன. அவற்றுக்கு எதிராகக்கூட நாம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அடக்குமுறையென வெறுமனே கூக்குரல் எழுப்புவதைவிடுத்து, எங்கு, எப்போது அது நடந்தது என தெளிவாக கூறுவதே அர்த்தமுள்ள கருத்தாக அமையும். அப்போது ஏதேனும் தவறு இருந்தால்கூட அதனை எம்மால் திருத்திக்கொள்ள முடியும்.

அதேவேளை, நாம் எதிரணியில் இருந்தபோது அவசரகாலச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தோம். அப்போது அச்சட்டம் அடக்கமுறைக்காகப் பயன்படுத்தப்பட்டது. அதற்குரிய நிறைய சான்றுகள் உள்ளன எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டினார்.