‘எந்தவொரு சர்வதேச மோதலிலும் எமது நிலைப்பாடு நடுநிலையானது’ : ஜனாதிபதி கருத்து

‘இலங்கையின் நிலப்பரப்பு, கடல் எல்லைகள் மற்றும் வான்பரப்பு ஆகியவற்றை எந்தவொரு அரசும் மோதல்களின் போது ஒரு தரப்பிற்கு ஆதரவாகப் பயன்படுத்துவதற்கோ அல்லது வேறு நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பயன்படுத்துவதற்கோ இடமளிக்கப் போவதில்லை’ என ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எந்தவொரு சர்வதேச மோதலிலும் எமது நிலைப்பாடு நடுநிலையானது. எமது நிலப்பரப்பு, கடல் எல்லைகள் அல்லது வான்பரப்பை எந்தவொரு நாட்டிற்கும் மோதல்களின் போது சார்பாகவோ அல்லது மற்றொரு நாட்டிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலோ பயன்படுத்த நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.

அதுவே எமது நிலைப்பாடு. அதனால்தான் மோதல் ஆரம்பமான தருணத்திலிருந்தே நாம் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் வெளியிட்ட அறிக்கைகள் அனைத்தும் இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன.

ஈரானின் இரண்டு கப்பல்கள் தொடர்பான பிரச்சினை எழுந்தபோதும் நாம் இந்த நடுநிலைமையையே கடைப்பிடித்து வருகிறோம்.

அதேநேரம், ஒரு தேசமாகவும் அரசாகவும் நடுநிலைமையைப் பாதுகாக்கும் அதேவேளை, மனிதநேயத்திற்கு நாம் முதலிடம் வழங்குகிறோம். எனவே, மனிதநேயத்தைப் பாதுகாப்பதற்கும், மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எதனையும் எடுப்பதற்கு நாம் ஒருபோதும் தயங்க மாட்டோம்.

ஒரு நாடு பின்பற்ற வேண்டிய மிகச் சிறந்த கொள்கை அதுவென்றே நான் கருதுகிறேன். அந்தக் கொள்கையிலிருந்தே நாம் செயற்படுகிறோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.