ஈரானியக் கப்பல் மீது தாக்குதல் : எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி?

இலங்கை கடற்பரப்பில், கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மற்றுமொரு ஈரானியக் கப்பல் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது குறித்து அரசாங்கம் தெளிவான அறிக்கையொன்றை வெளியிட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை (05) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட டார்பிடோ ஏவுகணை மூலம் நேற்று கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு விளக்கமளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஈரானியக் கப்பலில் இருந்தவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டினார்

இந்தச் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து இதுவரையில் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பும் விடுக்கப்படவில்லை.

நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய பாரியதொரு நிலைமை உருவாகியுள்ளது. இவ்வாறானதொரு கப்பல் அழிக்கப்பட்டமை குறித்து அரசாங்கம் அறிந்திருந்தும் சபைக்கு அறிவிக்காதது, பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியலமைப்பு ரீதியான பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு தடையாக உள்ளது.

தற்போது காலி – கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஈரானிய பிரஜைகளின் சடலங்களை வைப்பிலிடுவதற்கு 40 அடி கொள்கலன் வாகனங்களை வைத்தியர்கள் கோரியுள்ளதாகவும், அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

எமது நாட்டின் கடற்பரப்பில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து அரசாங்கம் அறியாமல் இருப்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது தெரிவித்துள்ளார்.