புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார் கரிசனைகளை செவிமடுத்த நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ரியாஸ் க்ரவிக், இது தொடர்பில் புதன்கிழமை (4) அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருக்கும் நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ரியாஸ் க்ரவிக் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இச்சந்திப்பில் நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சருடன் இலங்கைக்கான அந்நாட்டுத்தூதுவர் மே-எலின் ஸ்டேனரும் தமிழரசுக்கட்சி சார்பில் அதன் பாராளுமன்றக்குழுத்தலைவர் இரா.சாணக்கியனும் கலந்துகொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, மாகாணசபைத்தேர்தல்கள், நீதி மற்றும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இந்த நிலையில், அவற்றை செவிமடுத்த நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர், இன்றைய தினம் (4) அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவிருப்பதாகவும், அச்சந்திப்புக்களின்போது இக்கரிசனைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் எடுத்துரைக்கவிருப்பதாகக் குறிப்பிட்டார்.



